தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கொரோனா தொற்று ஒரு புறம் உச்சம் தொட்டு வரும் நிலையில், மறுபுறம் தடுப்புசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 வாரங்களுக்கு (மே 10 முதல் 24 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பல பகுதிகளில் படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகள் பலரும் மருத்தவமனை வாயிலில் காத்திருக்கின்றனர்.
மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை முறைப்படுத்த 4 பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறை அமைத்துள்ளது. தொழிற்துறை செயலாளர் முருகாநந்தம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை சிறப்பு அதிகரி செந்தில் குமார் உள்ளிட்டேர்ர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து இந்த குழு அனைத்து மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை பகிர்ந்தளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜன் தேவை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-update-oxygen-distribution-team-health-department-302837/