சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. மிகவும் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்டாலின் முதல்வராவதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த மு.க.அழகிரி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் அழகிரி மகன் தயாநிதி அழகிரி கலந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலினும் தயாநிதி அழகிரியும் சில நிமிடங்கள் சந்தித்து பேசினார்கள். அதன்பின் இருவரும் மகிழ்ச்சியாக கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.திமுகவினர் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார்.
பதவியேற்பு விழாவில் முதல் ஆளாக ஆளுநர் முன்னிலையில் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஸ்டாலின் உறுதி மொழியில் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என உச்சரித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அங்கே அமர்ந்திருந்த அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியில் ஆளுநருக்கு மஞ்சள் நிறத்தில் பூங்கொத்து கொடுத்து மஞ்சள் ஷால் போர்த்தி மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
அமைச்சர்களாக ஒவ்வொருவரும் பதவியேற்றபின் ஸ்டாலினை நோக்கி வணக்கம் செலுத்தியபோது, பதிலுக்கு உட்கார்ந்தபடியே வணக்கம் சொல்லாமல் ஸ்டாலின் நாற்காலியில் இருந்து சற்று எழுந்து அனைவருக்கும் வணக்கம் செலுத்தியது கவனிக்க தகுந்த ஒன்றாக இருந்தது.
நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.ஒரே மேஜையில் ஆளுநர் , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், ஓ.பன்னீர் செல்வம், தனபால் ஆகியோர் தேநீர் அருந்தி கலந்துரையாடினர். அதிமுக அரசு ஆட்சியை இழந்தாலும் திமுக அரசின் பதவியேற்பு விழாவுக்கு ஓ.பன்னீர் செல்வம், தனபால் கலந்துகொண்டது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களிலேயே ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் என்றும், belongs to dravidian stock எனவும் மாற்றப்பட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-becomes-tamilnadu-chief-minister-durga-stalin-emotional-300842/