7.05.2021 - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் தலைமைச் செயலகம் சென்று தேர்தல் வாக்குறுதியாக அளித்த 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், உறுதி மொழி மேற்கொள்ளும்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி பதவியேற்ருகொண்டார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் இடம்பெறும் 33 அமைச்சர்கள் பதவியேற்ருக்கொண்டனர்.
பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதியின் வீட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனையடுத்து, சிஐடியு காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கே ராஜாத்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
இதையடுத்து, அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் சென்றார். அங்கே அவருக்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முதல்வர் அறைக்கு சென்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல்வராக பொறுப்பேற்றுகொண்ட மு.க.ஸ்டாலின் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 அளிக்கும் கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். முதல் கட்டமாக மே மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
16.05.2021 முதல் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவில் கையெழுத்திட்டார்.
கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கிழ் சிகிச்சை பெறலாம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் இந்த 5 உத்தரவில் முதல் கையெழுத்திட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-first-signs-in-which-orders-300988/