13 08 2021
தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக குடும்பத் தலைவி படத்தை மாற்ற வேண்டுமா என்பது தொடர்பாக, பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாந்தந்தோறும் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற பலரும் தங்கள் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக குடும்பத் தலைவி படத்தை மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி படம் இருந்தால்தான் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என்று பலரும் குடும்பத் தலைவி படத்தை மாற்றி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால், தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டட்தில் பயன்பெற ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி படம் இடம்பெற வேண்டுமா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) பட்ஜெட் தாக்கலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (ஆகஸ்ட்13) 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.
தமிழ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக கூறியாவது:
“குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால்தான் உரிமைத் தொகை உதவி கிடைக்கும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பல குடும்ப அட்டைகளில், பெண குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்பத் தலைவராக பெயர் மாற்றப்பட்டு வருகிறது.
இந்த உரிமைத் தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட உள்ளது. எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவல் தவறானது. எனவே, உரிமைத் தொகை பெற தவறான நினைத்து குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.
தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இதன் மூலம், குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் படத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ptr-palanivel-thiagarajan-says-do-not-change-the-name-of-the-head-of-the-family-in-rations-card-332098/