13 08 2021
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் தமிழ் வளர்ச்சிக்கான ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத்துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியில் செயல்படுத்த வேண்டும் என பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும் என்றும் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ஆம் தேதி ரூ.10 லட்சம் ரொக்க தொகையுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புகள் தமிழ் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கியமாக தொல்லியல் துறையை பொறுத்தவரையில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கி பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது தொல்லியல் துறையினரின் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டதை, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அகிய நிறுவனங்களோடு இணைந்து முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-budget-keezhadi-tamil-official-language-in-all-department-332079/