வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் உள்நாட்டுப்போர் : தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் தலிபான்கள்

 

Tamil World News : ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப்படைக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பல நகரங்களில் அவ்வப்போது அரங்கேறி வரும் தாக்குதல் சம்பவத்தின் காரணமாக பொதுமக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் உள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போரில், அரசுப்படைக்கு உதவும் வகையில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் அரசுப்படையுடன் இணைந்து தலிபான்களை ஒடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப், தலிபான் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. இன்னும் சில நாட்களில் முழுவதுமாக வெளியேறிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப்படைகள் வெளியேறுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தலிபான்கள், மீண்டும் தங்களது தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த தாக்குலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரான ஹெராட் நகரை கைப்பற்றிய தாலிபான்கள் அந்நகரை தங்களது கட்டுப்பாட்டாட்டில் வைத்துள்ளனர். இது குறித்து செய்தி நிறுவனமான ஏஎஃபி, தலிபான் போராளிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை ஹெராத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இன்று, தலிபான்கள் காபூலுக்கு அருகே ஒரு மாகாண தலைநகரைக் கைப்பற்றினர்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, தீவிரவாதிகள் காபூலுக்கு தென்மேற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜினி நகரத்தின் மீது இஸ்லாமிய மத நம்பிக்கையுடன் அச்சிடப்பட்ட வெள்ளைக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.  இந்நிலையில், ஊருக்கு வெளியே ஒரு புலனாய்வுத் தளத்திலும், இராணுவ அமைப்பிலும் ஆங்காங்கே சண்டை நடைபெற்று வருவதாக, இரண்டு உள்ளூர் அதிகாரிகள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டி ஒரு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், , தலிபான்கள் காபூலை 30 நாட்களில் தனிமைப்படுத்தி 90 நாட்களுக்குள் கைப்பற்றலாம் என்று கூறியுள்ளார்.  பெயர் தெரியாத நிலையில் ராய்ட்டர்ஸிடம் பேசிய அதிகாரி, காபூல் எவ்வளவு காலம் முடியும் என்ற புதிய மதிப்பீட்டை கூறினார்.  இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருவதால், ஆப்கானிஸ்தானில் உள்ள பிற நாட்டினர் தங்களது தாய் நாட்டிற்கு செல்ல அந்நாட்டு தூதரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/international/tamil-news-afghanistan-war-taliban-forces-take-over-hera-331887/