17 08 2021 தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, டீசல் விலை குறைப்பு, அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சார்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.
டீசல் விலை குறைப்பு
இன்றைய கூட்டத்தொடரில், பெட்ரோல் விலையை குறைத்தது போல டீசல் விலையும் குறைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டீசல் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு நேரடியாக கிடைக்குமா என்று சொல்லமுடியாது. பெட்ரோல் டீசல் உபயோகிப்பவர்களின் உரிய தகவல்கள் அரசிடம் இல்லை. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் போன்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கவில்லை. அரசு ஆய்வு செய்ததில் 4 முதல் 5 வகையான பெட்ரோல் பயன்பாடு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், விலைகுறைப்பு எவ்வாறான பயனை அளிக்கிறது என்பது குறித்த விபரங்களை சேகரித்து வருவதாகவும், 30 நாட்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு, பயன்தரக்கூடிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.
அர்ச்சகர் நியமன விவகாரம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் மூலம், ஆகஸ்ட் 15 அன்று அர்ச்சகர் நியமனம் நடைபெற்றது. மேலும், இது தொடர்பான வழக்கில் முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தபோது, ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து அறநிலையத்துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.
ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே திட்டமிட்டு, சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும் படவேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்” என்று தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை
அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். அந்த மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கடந்த 3 மாதங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டே 1650 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-budget-2021-highlights-diesel-price-priest-appointments-333294/