17 08 2021
மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவே பேரவைக்கு வருகிறேன் என குறிப்பிட்டு, பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பேசியபோது, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொருளாதாரம் தெரியாத ஒருவர் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்பார் என்றும், எத்தனை முறை விளக்கம் தருவது எனவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொருளாதாரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
மக்கள் பிரச்னையை பேசத்தான் பேரவைக்கு வந்துள்ளோம் என்றும், பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்க வரவில்லை எனவும் அவர் காரசாரமாக பதிலளித்தார்.
மேலும், மக்கள் பிரச்னைகள் குறித்து தெரியாமல், பொருளாதாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பொருளாதாரம் குறித்து படித்த தனக்கே நிதியமைச்சர் பேசுவது புரியவில்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
சில நேரங்களில் நிதியமைச்சர் கூறுவது தனக்கே புதிது புதிதாக உள்ளது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.
source https://news7tamil.live/edappadi-palanisamy-ptr-argument.html