புதன், 18 ஆகஸ்ட், 2021

முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா: ‘’என்னைப்போல் பல பெண்கள் பணிக்கு வர வேண்டும்

 female odhuvar suhanjana

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதிகளை சேர்ந்த 24 அர்ச்சகர்கள், 20 ஓதுவார்கள் உட்பட 216 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதைதொடர்ந்து சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் சுஹாஞ்சனா என்ற 27 வயது பெண்மணி ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரிடம் பணி நியமன ஆணையை பெற்ற சுஹாஞ்சனா, நேற்று மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் தனது ஓதுவார் பணியை தொடங்கினார். இவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சுஹாஞ்சனாவுக்கு சிறு வயதிலேயே பாட்டு பாடுவதில் ஆர்வம் அதிகம். நவராத்திரி விழாவுக்கு செல்லும்போது சிலர் பாடுவதைக் கேட்டு தானும் பாட வேண்டும் என நினைத்துள்ளார். கோயில் விழாக்கள், உறவினர்கள் முன்னிலையில் பாடுவது என இருந்துள்ளார். பூஜைகளின் போது சுவாமி முன்பாக ஆண்கள் பாடுவதை பார்த்து தானும் அது போல் பாட விரும்பி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது ஆர்வத்தை கண்டு பத்தாம் வகுப்பு முடித்தவுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு தேவாரம், திருவாசகம் பாடல்களைப் படித்துள்ளார்.

தொடர்ந்து கரூரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு திருவாசகம் மற்றும் தார்மீக வகுப்புகளை பயிற்றுவித்து வந்துள்ளார். பிறகு திருமணத்திற்கு பிறகு சென்னை வந்துள்ளார். தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் கணவர் கோபிநாத். இன்ஜினியராக உள்ளார். இந்த தம்பதியின், மகள் வன்ஷிகா சக்தி. மாமனார் பரமசிவம், மாமியார் லட்சுமி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார் சுஹாஞ்சானா.

இந்த நிலையில், ஓதுவார் பணிக்கு அறநிலையத்துறையில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலமைச்சர் கையால் பணி நியமன ஆணையையும் பெற்றுவிட்டார்.

பெண்கள் பல துறையில் பயணித்தாலும், ஓதுவராகவும் பணியாற்றவில்லை என்பதால், இதில் ஆர்வமாக விண்ணப்பித்து சேர்ந்து உள்ளார். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த பணியை வழங்கிய முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, கோவிலில் இவர் பாடும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “தென்னாட்டுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..” என்று துவங்கும் திருவாசக பாடலை, இறைவனை நோக்கி சன்னதியில் நின்று சுஹாஞ்சனா பாடும் அந்த வீடியோ காட்சி, நெகிழ்ச்சியாக உள்ளது.

தன்னை பார்த்து நிறையபேர் ஓதுவார் பணிக்கு செல்ல வேண்டும் என விருப்பப்படும் அளவுக்கு செயல்பட வேண்டும் என நினைப்பதாக கூறுகிறார் சுஹாஞ்சனா.

source https://tamil.indianexpress.com/tamilnadu/newly-appointed-female-odhuvar-suhanjana-sings-at-chennai-temple-333141/