Demolition of John Pennycuick’s house : தேனி, மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்திருப்பது முல்லைப் பெரியாறு அணை. அப்பகுதியில் வாழும் பலர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை நெடுங்காலமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய பிறந்த நாள், நினைவு தினம் என அனைத்தும் இப்பகுதியில் மிக முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் உள்ள பென்னிகுயிக்கின் இல்லத்திற்கு அருகே, கலைஞர் கருணாநிதியின் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. நூலகம் அமைக்க எக்காரணம் கொண்டும் பென்னிகுயிக்கின் இல்லத்தை கையகப்படுத்தவோ அல்லது இடிக்கவோ கூடாது என்றும், இது தொடர்பாக ஆளும் திமுக அரசு யோசித்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமை கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது
பென்னி குயிக்கின் இல்லத்திற்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “பல இடையூறுகளுக்கு மத்தியில், தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தமிழகத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த பென்னிகுயிக் அவர்களின் நினைவு இல்லம் தமிழக அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞரின் பெயரில் நூலகம் அமைத்து அறிவை வளர்ப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை அழித்து அங்கே நூலகம் அமைப்பது சரியான முடிவல்ல என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மதுரை பாண்டி கோவிலுக்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் அதிகமாக உள்ளது. அரசு நினைத்தால் அங்கே மிகப்பெரிய நூலகத்தைக் கட்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சரின் பதில்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இதற்கு பதில் கூறிய போது, எதிர்க்கட்சியினரின் அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கலைஞரின் பெயரால் நூலகம் அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விருப்பம் இல்லை. தென் தமிழக இளைஞர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சியை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மதுரை இளைஞர்களின் நலனுக்காக இந்த நூலகம் கட்டப்படும் என்று அவர் கூறினார்.
கருணாநிதி நூலகமும் பென்னிகுயிக் வாழிடமும்
மதுரை மாவட்டத்தில் ரூ. 70 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மிக ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரையில் இதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஏழு இடங்களை பார்வையிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடத்தில் சுமார் 6 லட்சம் புத்தகங்களுடன் இந்த நூலகம் அமைய உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட இந்த வளாகத்தில் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் 15.01.1841-ஆம் ஆண்டில் பிறந்து 09.03.1911ம் ஆண்டு மறைந்துவிட்டார். ஆனால் பொதுப்பணித்துறை ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது இந்த கட்டிடம் 1912ம் ஆண்டு பூமிபூஜை செய்யப்பட்டு 1913ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேடு எண் 159/1-ல் கூறப்பட்டுள்ளது என்று மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-against-demolition-of-john-pennycuicks-house-for-kalaignar-memorial-library-328224/