தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிறந்தநாளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு சிலர் சர்ச்சையை எழுப்பியுள்ளனர். அதில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் மேலாதிக்க மனநிலையுடன் திருமாவளவனை சோஃபாவில் அமர வைக்காமல் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்ததாக குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் சர்ச்சையாக்கியுள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அண்மையில் பிறந்தாள் கொண்டாடியுள்ளார். அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பிறந்தநாளுக்கு திமுக கூட்டணி கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2004 மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அன்றைக்கு கண்ணப்பனாக அறியப்பட்ட இன்றைய அமைச்சர் ராஜ கண்ணப்பனின் தமிழ் தேசம் மக்கள் கட்சி மற்றும் ஜார்ஜ் பெர்ணண்டஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டனர். அப்போதில் இருந்தே, ராஜ கண்ணப்பன் உடன் திருமாவளவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், விசிக தலைவர் திருமாவளவன் அமைச்சர் ராஜ கண்ணப்பனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், சோஃபாவில் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே திருமாவளவன் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் மேலாதிக்க மனநிலையுடன் திருமாவளவனை அவமதித்துள்ளதாகக் கூறியதால் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் சர்ச்சையானது.
உண்மையில், அமைச்சர் ராஜ கண்ணப்பன், திருமாவளவன் சந்தித்தபோது என்ன நடந்தது என்று ஊடகங்கள் விசிகவின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கூறுகையில், “எங்கள் தலைவர் திருமாவளவன் அமைச்சர் கண்ணப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவருடைய வீட்டுக்கு சென்றபோது அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியில் வந்து எங்கள் தலைவரை வரவேற்றார். பின்னர், உள்ளே சென்றபோது, அமைச்சர் ராஜ கண்ணப்பன், அவர் அமர்திருப்பதைப் போலவே பக்கத்தில் இருந்த நாற்காலியில்தான் எங்கள் தலைவரையும் அமரச் சொன்னார். தலைவர்தான் அருகே அமர்ந்து முகத்தைப் பார்த்து பேச இந்த நாற்காலியில் அமர்ந்தார். எங்கள் தலைவருக்கு பொதுக்கூட்ட மேடைகளில் அவருக்கென்று பிரத்யேகமான இருக்கை தயார் செய்வோம். ஆனால், அதில் அவர் உட்கார மாட்டார். கட்சித் தொண்டர்கள் வீட்டுக்குப் போனால், பாயில் உட்கார்ந்துகொள்வார். எப்போதும், எங்கேயும் எளிமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார். அது அவருடைய இயல்பு. அதேபோல, கைகைட்டி உட்காருவதும் அவருடைய பழக்கம். அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை நீங்கள் பார்த்தாலே அது தெரியும். ஆனால், அமைச்சருக்கு முன்பாக அடக்க ஒடுக்கமாக இருக்கிறார் திருமாவளவன் எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். எங்கள் தலைவரின் மீது சாதிய ரீதியாக வன்மம், வெறுப்பு இருப்பவர்கள் இந்த வழியில் அதைத் தீர்த்துக்கொள்கின்றனர்.
அரசியல்ரீதியாக எங்களின் மீது விமர்சனங்களை முன்வைக்க முடியாதவர்கள், எங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள்தான் இப்படி நடந்துகொள்கின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வேலையைச் செய்வது நாம் தமிழர் கட்சியினர்தான். அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குத் தெரிந்து செய்கின்றனரா, அவரே இதை ஊக்கப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், இது போன்ற செயல்கள் வன்மையான கண்டனத்துக்கு உரியவை” என்று விளக்கம் அளித்தார்.
அதே போல, இந்த சர்ச்சை விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் ஊடகங்களிடம் கூறுகையில், “அமைச்சர் அமர்ந்திருப்பதைப்போலவே அருகில் இன்னொரு நாற்காலி இருக்கிறது. அதில்தான், திருமாவளவன் அவர்களை அமரச் சொன்னோம். ஆனால், அவர் நடுவில் சிலை இருந்ததால், நாற்காலியில் அமர்ந்துகொண்டு முகம்பார்த்துப் பேசுவதற்கு வசதியாக இல்லையென்று அவர்தான் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். இருவரும் நீண்டகால நண்பர்கள். பழைய விஷயங்களைச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். திருமாவளவன் கிளம்பியபோதுகூட வாசல்வரைக்கும் சென்று வழியனுப்பிவிட்டு வந்தார் அமைச்சர். ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல் சிலர் வேண்டுமென்றே அமைச்சர்மீது அவதூறு பரப்பிவருகிறார்கள்” என்று கூறினார்கள்.
விசிக தலைவர் திருமாவளவன் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் நாற்காலி விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் சிலர் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவருக்கு திமுகவினரும் விசிகவினரும் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தனர். விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் ராஜ கண்ணப்பனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூற சென்றபோது, அமைச்சர் வாசலுக்கு வந்து வரவேற்கிறார். அந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதே போல, நாம் தமிழர் கட்சியினர்தான் இதை சமூக ஊடகங்களில் சர்ச்சையாக்கியதாக விசிக செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கூறியிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பிலும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சியினர் யாரும் அந்த படத்தை பகிரவில்லை, விமர்சனங்களை முன்வைக்கவில்லை. சிலர் ஆதங்கத்தில் சில கருத்துகளை பதிவிட்டிருக்கலாம். சாதியக் கண்ணோட்டத்தில் செய்தார்கள் என்பதெல்லாம் தவறான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-meets-minister-raja-kannappan-photo-becomes-controversy-in-social-media-328584/