சிறுபான்மையினர் பள்ளிகளின் தேசிய அளவிலான மதிப்பீட்டிற்குப் பிறகு, மதரஸா உள்ளிட்ட அனைத்து பள்ளிகளையும் கல்வி உரிமை மற்றும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் கொண்டு வர தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
NCPCR, மதரஸா போன்ற பள்ளிகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்தது. அதன் கணக்கெடுப்பு மதிப்பீட்டில், இது போன்ற பள்ளிகளில் ஏராளமான சிறுபான்மைச் சமூகங்களைச் சாராத மாணவர்கள் படிக்கின்றனர் என்று கண்டறிந்ததால் இந்த இடஒதுக்கீட்டை NCPCR ஆதரிக்கிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட NCPCR கணக்கெடுப்பு அறிக்கையின்படி, கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் 74 சதவீத மாணவர்கள் சிறுபான்மையினர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக, இதுபோன்ற பள்ளிகளில் 62.50 சதவீத மாணவர்கள் சிறுபான்மையினர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
”சிறுபான்மை சமூகங்களின் கல்வி குறித்த இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21A தொடர்பாக, பிரிவு 15 (5) இன் கீழ் விலக்கின் தாக்கம்” என்ற தலைப்பில் உள்ள அறிக்கை, பள்ளிக்கூடத்திற்கு வெளியே உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதாகவும் கூறுகிறது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 1.1 கோடி குழந்தைகள்.
“ஆய்வின் நோக்கம், சிறுபான்மை நிறுவனங்களுக்கு கல்வி உரிமையின் மற்ற விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கும் 93 வது திருத்தம், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை எவ்வாறு பாதித்தது மற்றும் இடைவெளி இருந்ததா என்பதை மதிப்பிடுவதாகும்” என்று NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
“நாங்கள் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் மதரஸாக்களை கவனித்தோம். கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 74 சதவீதம் பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உட்பட சில திடுக்கிடும் கண்டுபிடிப்புகள் எங்களிடம் உள்ளன, ”என்று பிரியங்க் கனூங்கோ கூறினார்.
“RTE ஐ செயல்படுத்த தேவையில்லை என்பதற்காக பல பள்ளிகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக பதிவு செய்துள்ளது, எங்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் சிறுபான்மையினரின் கலாச்சார மொழி மற்றும் மதப் பாதுகாப்பிற்காகத் தங்கள் சொந்த நிறுவனங்களைத் திறக்கும் உரிமையை உறுதிசெய்யும் பிரிவு 30, குழந்தையின் அடிப்படை கல்வி உரிமையைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவு 21 (A) இல் உள்ளதை மீற முடியுமா?. நிச்சயமாக பிரிவு 21 (A) ஐ கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும். என்று பிரியங்க் கனூங்கோ கூறினார்.
“இந்த விலக்கு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என்று பிரியங்க் கனூங்கோ கூறினார். மேலும், இது சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு இந்த நிறுவனங்களில் கல்வியை மறுக்கிறது. அறிக்கையின் மூலம், கல்வி உரிமை மற்றும் சர்வ சிக்ஷா அபியான் திட்டங்கள் மதரஸாக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
NCPCR அறிக்கையின்படி, சிறுபான்மை பள்ளிகளில் 8.76 சதவீத மாணவர்கள் மட்டுமே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள். “சிறுபான்மை பள்ளிகள் RTE சட்டத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதால், பின்தங்கிய பின்னணியில் இருந்து மாணவர்களை சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை” என்று அறிக்கை கூறுகிறது.
பள்ளிகளின் மத வாரியான பிரிவுகளின்படி, இந்தியாவின் சிறுபான்மை மக்கள்தொகையில் 11.54 சதவிகிதம் இருக்கும் கிறிஸ்தவர்கள், 71.96 சதவிகித பள்ளிகளை நடத்துகிறார்கள், சிறுபான்மை மக்கள்தொகையில் 69.18 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்கள் 22.75 சதவிகிதம் பள்ளிகளை நடத்துகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
சீக்கியர்கள் சிறுபான்மை மக்கள் தொகையில் 9.78 சதவிகிதம் உள்ளனர் மற்றும் 1.54 சதவிகித பள்ளிகளை நடத்துகின்றனர்; சிறுபான்மை மக்கள் தொகையில் 3.83 சதவிகிதம் கொண்ட பௌத்தர்கள் 0.48 சதவீத பள்ளிகளை நடத்துகின்றனர்; மற்றும் சிறுபான்மை மக்கள் தொகையில் 1.9 சதவிகித கொண்ட சமணர்கள் 1.56 சதவீத பள்ளிகளை நடத்துகின்றனர்.
அறிக்கையின்படி, நாட்டில் மூன்று வகையான மதரஸாக்கள் உள்ளன. ஒன்று, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் மதம் மற்றும் மதச்சார்பற்ற கல்வியை வழங்குகின்றன; இரண்டு, மதச்சார்பற்ற கல்வி வழங்கப்படாத அல்லது உள்கட்டமைப்பு பற்றாக்குறை போன்ற பிற காரணிகளால் மாநில அரசுகள் பதிவு செய்ய பற்றாக்குறையாகக் கண்டறியப்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள்; மூன்று, இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத, வரம்புக்குள் வராத மதரஸாக்கள்.
NCPCR இன் படி, 4 சதவிகித முஸ்லீம் குழந்தைகள் (15.3 லட்சம்) மதரசாக்களில் கலந்து கொள்கிறார்கள் என்று சொல்லும் சச்சார் கமிட்டி அறிக்கை, பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளது.
NCPCR அறிக்கை, பல நூற்றாண்டுகளாக உருவான மதரஸாவின் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியானவை அல்ல என்றும், “தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அறியாமல் இருக்கிறது, பல மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, சமூகத்தின் மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, சமூகத்தோடு ஒன்றி வர முடியாமல் இருப்பதாகவும் கூறுகிறது”. மதரஸாக்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை ஆங்கிலேய ஆட்சியில் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டதாக கூறுகிறது. “1947 க்கு முன் நிறுவப்பட்ட சிறுபான்மை பள்ளிகள், பிரிட்டிஷாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரித்தாளும் கொள்கையின் கீழ் பொருளாதாரம், மதம், சமூகம் மற்றும் அரசியல் வேறுபாடுகளின் அடிப்படையில் மக்களை பிரிக்க முயன்றன,” என்று அறிக்கை கூறுகிறது. இது, “இந்திய கவுன்சில் சட்டம் 1909 இன் ஒரு பகுதியாக (பொதுவாக மார்லி மிண்டோ சீர்திருத்தம் என்று அழைக்கப்படுகிறது) இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே பிளவை உருவாக்க தனித்தனித் தொகுதிகளை வழங்கிய போது, 17 வது வைஸ்ராயால் அறிமுகப்படுத்தப்பட்டது.”
2006 ஆம் ஆண்டில் 93 வது திருத்தத்திற்குப் பிறகு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழைப் பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்தது என்றும், “2005-2009 ஆண்டுகளில் மொத்த பள்ளிகளில் 85% க்கும் அதிகமான பள்ளிகள் சான்றிதழைப் பெற்றுள்ளன” என்றும் அறிக்கை கூறுகிறது. இரண்டாவது எழுச்சி 2010-14 இல் காணப்பட்டது, 2012 சொசைட்டி தீர்ப்புக்குப் பிறகு, ஆர்டிஇ சட்டம் 2009, பிரிவு 12 (1) (சி) மற்றும் 18 (3) ஆனது உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளுக்குப் பொருந்தாது. 2014 இல், வழங்கப்பட்ட பிரமதி தீர்ப்பின்படி சிறுபான்மை பள்ளிகளுக்கு RTE சட்டம் பொருந்தாது.
அறிக்கை சமமற்ற எண்களின் உதாரணங்களையும் தருகிறது. உதாரணமாக, மேற்கு வங்கத்தில், சிறுபான்மை மக்களில் 92.47% முஸ்லிம்கள் மற்றும் 2.47% கிறிஸ்தவர்கள். மாறாக, 114 கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளும், முஸ்லிம் சிறுபான்மை அந்தஸ்துள்ள இரண்டு பள்ளிகளும் மட்டுமே உள்ளன. “இதேபோல், உத்தரபிரதேசத்தில், கிறிஸ்தவ மக்கள் தொகை 1% க்கும் குறைவாக இருந்தாலும், மாநிலத்தில் 197 கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகள் உள்ளன. இந்த விகிதாசார எண் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கான முக்கிய நோக்கத்திற்கு எதிர்மறையாக இருக்கிறது.
“பள்ளி செல்லும் வயதுக் குழுக்களில் சிறுபான்மை மாணவர்கள் அதிகமாக இருந்தாலும், சிறுபான்மை குழந்தைகள் மக்கள் தொகையில் 8% க்கும் குறைவாகவே சிறுபான்மை பள்ளிகளில் கல்வி வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச சதவிகிதம் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட வேண்டியது குறித்து குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது, “என்று அறிக்கை கூறுகிறது.
source https://tamil.indianexpress.com/education-jobs/ncpcr-survey-finds-gaps-wants-all-minority-schools-under-rte-331424/