Tamil Nadu Agri budget 2021 Palmyra tree : தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 13/08/2021 அன்று நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன். தமிழகத்தின் முதல் காகிதமற்ற இ-பட்ஜெட்டாக நேற்று இந்த பட்ஜெட் நடைபெற்றது. முன்பே வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரங்களை காக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அந்த பட்ஜெட்டில் இடம் பெற்றன. பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். பனை மரங்களை வேரோடுவெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பனை ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பனை வெல்லத்தை நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-agri-budget-2021-palmyra-tree-development-schemes-announced-today-332333/