Tamilnadu News Update : தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில், சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில, கந்த மாத தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதல்கட்டமாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் வரலாற்றில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டசபையில் பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பட்ஜெட் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் துறைவாரியான நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சட்டசபையில் இன்று பல்வேறு அறிவிப்புகை வெளியிட்ட செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலைகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கும், சென்னை ராணிமேரி கல்லூரியிலும் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்ச மு.சாமிநாதன், தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலும் சிலை நிறுவப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் பத்திரிகையாளர் நல வாரியம், பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கான உதவித் தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு “அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தனது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-list-of-new-statues-for-leaders-in-tamilnadu-339978/