தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனிதீர்மானத்தை கொண்டுவந்துள்ளேன்” என்று கூறினார்.
அதிமுக, பாஜக வெளிநடப்பு
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியதுடன், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக உறுப்பினர்களும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நால்வரும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, மமக, தவாக, கொமதேக ஆகியோர் ஆதரித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நல ஆணையம்
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நல ஆணையம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும்.
39 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாயக் கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடியினருக்கு ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும்.
வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
13 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
31 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்படும்.
92 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 48 விடுதிகளுக்கு ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும்.
மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படி மத்திய அரசு வழங்குவதற்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
கடலூர் மாவட்டம் – விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மூன்று புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும்.
தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலுள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
512 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான்கள் வழங்கப்படும்.
51 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களுக்கு இன்வர்ட்டர் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.3 கோடி செலவில் நீர்பாசனத்துக்கான பிவிசி குழாய்கள் வாங்குவதற்காக தலா ரூ.15,000 மானியமாக வழங்கப்படும்.
2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.2 கோடி செலவில் புதிய மின் மோட்டார் வாங்க தலா ரூ.10,000 மானியமாக வழங்கப்படும்.
5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் காடுகள், நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும்.
5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழில் மேலாண்மை பயிற்சிகள் ரூ.2 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்.
25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு அடைகாப்பகச் சேவை வழங்கும் புதிய திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூ.50,000 வீதம் 100 நபர்களுக்கு மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஏனைய நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சிவசங்கரன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மாணவர்களின் பொழுதை பயனுள்ளதாக்கும் வகையில் ரூ.2.59 கோடி மதிப்பில் 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும்.
இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து ரூ.5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும்.
நரிக்குறவர், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ. 3000 மற்றும் பெண்களுக்கு ரூ. 5000 என உயர்த்தி வழங்கப்படும்.
அனைத்து கள்ளர் தொடக்கப்பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும்.
கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் முதல் பட்டதாரி என்பதற்கு பதில் முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்.
ஜெருசேலம் புனித பயணத்திற்கான மானியம் ரூ.37,000 லிருந்து ரூ.60000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-resolution-against-caa-caste-based-census-339942/