14 2 2022 கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், இஸ்லாமிய மாணவிகளுக்குப் போட்டியாக இந்து மாணவர்களும், மாணவிகளும் காவித் துண்டு அணிந்து பள்ளிக்கு வர முயன்றனர். இந்த விவகாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியதை அடுத்து, இரு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகல்கோட், தவனகிரி, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, கர்நாடகாவில் மாணவர்கள் மற்றும் மத அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதை அடுத்து, அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
source https://news7tamil.live/144-bans-released-for-karnataka-schools-over-hijab-issue.html