வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

4 பேர் கைது : கடத்த முயன்ற 7 சிலைகள் பறிமுதல்

 

Tamilnadu News Update : ராமநாதபுரம் மாவட்டத்தில் சிலைக்கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு காவலர் மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 4 பேரை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக இருப்பவர் அலெக்சாண்டர் (52). இவர், பழங்கால சிலைகளை கடத்தி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக மதுரை சிலை பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சிலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று அலெக்சாண்டரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடததியதில், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் இளங்குமரன் (44), விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டுவைச் சேர்ந்த கருப்பசாமி (35) ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட 7 சிலைகள் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து இளங்குமரன், கருப்புசாமி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் பழங்கால சிலைகள் விற்பனைக்கு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிலை பாதுகாப்பு அமைப்பினர் என தங்களை காட்டிக் கொண்ட இளங்குமரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எடப்பாடிக்கு வந்து சிலைகளை ஒரு கும்பலிடம் இருந்து கைப்பற்றி அலெக்சாண்டரிடம் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்க கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அலெக்சாண்டர், இளங்குமரன், கருப்புசாமி, நாகேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கணேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகினறனர் மேலும் இவர்களிடம் இருந்து கடத்தி விற்க முயன்ற 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏழு சிலைகளில் பெரிய நடராஜர் சிலை (2 அடி), சிறிய நடராஜர் சிலை (1.25 அடி), நாககன்னி (1.5 அடி), காளி (1 அடி), முருகன் (0.75 அடி), விநாயகர் (0.5 அடி) மற்றும் நாக தேவதை (0.5 அடி) ஆகியவை அடங்கும். இவற்றை, ராமநாதபுரம், குறிச்சாத்த அய்யனார் கோவில் அருகே, கும்பல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cop-and-bjp-functionary-arrested-for-smuggling-idols-406315/