செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

உக்ரைனை சுற்றி வளைக்கும் ரஷ்யா! எத்தகைய ராணுவ படையை குவித்துள்ளது?

 14 2 2022 Russia’s military build-up around Ukraine: தாங்கிகள் முதல் பீரங்கிகள் வரை, வெடிமருந்துகள் முதல் விண்ணில் ஏவி தாக்கப்படும் ஏவுகணைகள் வரை உக்ரைனை சுற்றி 1,30,000 துருப்புகளை கொண்டுள்ளது ரஷ்யா. புடின், ஒரு நாட்டின் மீது படையெடுக்க தேவையான 70% துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிலை நிறுத்தியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

நாளை கூட போர் ஆரம்பமாகலாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேக் சலீவன் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் புடின், உக்ரைன் நாட்டில் படையெடுப்பாரா என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள இயலவில்லை. ஏன் என்றால் தொடர்ந்து மாஸ்கோ, உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொள்ள எத்தகைய திட்டத்தையும் வைத்திருக்கவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது. குறிப்பிடத்தக்க இராணுவத் தலையீட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க பணிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

உக்ரைனை சுற்றியுள்ள ரஷ்யாவின் ராணுவக் குவிப்பு எத்தகையது?

இதுவரை ஏற்படுத்திய உள்கட்டமைப்புகளில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. சைபீரியா போன்ற தூர தேசத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட தாங்கிகளும் இதில் அடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த கட்டமைப்பின் அளவைப் புரிந்து கொள்ள, முதலில் ரஷ்ய இராணுவத்தின் பண்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுமார் 100 ரஷ்ய பட்டாலியன் தந்திரோபாய குழுக்கள் – 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட துருப்புக்களின் சண்டை அமைப்புகள், வான் பாதுகாப்பு, பீரங்கி மற்றும் தளவாடங்களுடன் – ரஷ்யா மற்றும் பெலாரஸுடனான உக்ரைனின் எல்லைகளில் குவிந்துள்ளன என்று ரஷ்ய இராணுவ நகர்வுகளைக் கண்காணிக்கும் ரோச்சன் கன்சல்டிங் தெரிவித்துள்ளது.

பி.டி.ஜி. என அழைக்கப்படும் பெட்டாலியன் டாட்டிக்கல் குரூப் என்பது சொந்த ஆயுதங்கள், வான்வழி தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸை கொண்டிருக்கும் 600 முதல் 1000 வரையான துருப்புகளை குறிப்பதாகும். 2015ம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரின் போது ரஷ்ய நிர்வாகத்திடம் 12க்கும் மேற்பட்ட பி.டி.ஜிக்கள் இல்லை. தற்போது 100 கணக்கான பி.டி.ஜிக்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ளது ரஷ்யா என்று அறிவித்துள்ளது ரோச்சன். இன்னும் தீவிரமான விஷயம் என்னவென்றால், ரஷ்யாவின் 11 ஒருங்கிணைந்த ஆயுதப் படைகளில் 10 தற்போது உக்ரைன் அருகே உள்ளது.

பால்டிக், கருங்கடல், வடக்கு மற்றும் பசிபிக் கடற்படைகளில் கூடுதலாக ரஷ்யா காலாட்படை வீரர்கலை இணைத்துள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயிற்சியை நடத்த இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் ஏவுகணை ஏவுதல் உட்பட 140க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளது. பால்டிக் மற்றும் வடக்கு கப்பற்படையில் பணியில் இருந்த போர்க்கப்பல்கள் தற்போது கருங்கடலை நோக்கி முன்னேறி செல்ல ஆரம்பித்துள்ளன. பசிபிக் கடற்படையில் இருந்து முக்கிய கப்பல்களும் மத்திய தரைக்கடல் நோக்கி செல்கின்றன.

இன்ஜினியரிங், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் இங்கே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இயந்திரமயமாக்கப்பட்ட படைகளுக்கு விரைவாக எரிபொருள் நிரப்பும் ரஷ்ய “பைப்லைன் துருப்புக்கள்” நாள் ஒன்றுக்கு 80 கி.மீ நீளத்திற்கு பைப்லைனை அமைக்க இயலும். கிரிமியாவிற்கு அருகில் உள்ள கிராஸ்னோடரில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் இரத்த விநியோகத்தை ரஷ்யா நகர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெலாரஸில் ஒரு பெரிய ரஷ்ய இராணுவப் பயிற்சியின் காரணமாக உக்ரைன் அடிப்படையில் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. ரஷ்யா – பெலாரஸ் கூட்டு பயிற்சி பிப்ரவரி 10ம் தேதி துவங்கியது. இது வருகின்ற 20ம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும். பெலாரஸில் தற்போது தரையிறக்கப்பட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையானது பனிப்போருக்கு பிறகு அதிக அளவில் இறக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 30,000 போர் துருப்புக்கள், ஸ்பெட்ஸ்னாஸ் சிறப்பு நடவடிக்கை படைகள், SU-35 உள்ளிட்ட போர் விமானங்கள், இஸ்கண்டர் இரட்டை திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆகியவையும் இங்கே பயிற்சி பெற்று வருகின்றன என்று நாட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பெர்க் பிப்ரவரி 3ம் தேதி அன்று கூறினார்.

கடைசியாக ரஷ்யா இவ்வளவு பெரிய படைகளை எப்போது குவித்தது?

பனிப்போருக்குப் பிறகு ரஷ்யா மிகப்பெரிய கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 1968 இல் அப்போதைய சோவியத் யூனியனும் அதன் வார்சா ஒப்பந்தக் கூட்டாளிகளும் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்தபோது ரஷ்ய நிர்வாகம் இரண்டரை லட்சம் துருப்புக்களை அனுப்பியிருந்தாலும், இன்னும் பத்து பிரிவுகளுடன், தற்போதைய உருவாக்கம் பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சோவியத் பயிற்சியிலிருந்து வெகு தொலைவில் இல்லை.

1981 இல் “Zapad-81” 150,000 துருப்புக்களை உள்ளடக்கியது, மேலும் தற்போதைய நிலைமை ஏற்கனவே 1988 இல் மிகப்பெரிய நேட்டோ பயிற்சியான ரிஃபோர்ஜரை (Reforger) மிஞ்சிவிட்டது. இந்த பயிற்சில் 1,25,000 துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டது. 1991 இல் நடந்த முதல் வளைகுடாப் போர் அல்லது 1999 இல் செர்பியாவிற்கு எதிரான நேட்டோ வான்வழிப் பிரச்சாரத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் அமெரிக்காவை விட ரஷ்யாவின் உருவாக்கம் இன்று பெரியதாக உள்ளது. இது முறையே 1994 மற்றும் 1999 இல் தொடங்கிய முதல் மற்றும் இரண்டாவது செச்சென் போர்களைக் கடந்தும் செல்கிறது. இதில் 50,000க்கும் குறைவான ரஷ்ய துருப்புக்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர்.

பால்கன் போர்களின் போது 1995 இல் செர்பியாவிற்கு எதிரான குரோஷிய தாக்குதல் ஆபரேஷன் ஸ்டோர்ம் ஆகும், இதில் 130,000 குரோஷிய துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய படையெடுப்பு எங்கே துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது?

ரஷ்யா உக்ரைனின் மூன்று பக்கங்களிலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கில் க்ரீமியாவும், இரு நாடுகளின் எல்லையின் ரஷ்யப் பக்கத்திலும், வடக்கே பெலாரஸிலும் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவை படையெடுப்பின் வாய்ப்புள்ள பகுதிகள் என்று பல ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகள் 2014 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன. CNN படி, பீரங்கி மற்றும் பிற கவசங்களை அதிகமாக கொண்டிருந்த மிகப்பெரிய தளமான யெல்னா தற்போது காலியாகிவிட்டது. சமீப நாட்களில் இந்த உபகரணங்கள் எல்லைக்கு மிக அருகில் நகர்த்தப்பட்டதாகத் தெரிகிறது.

2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா, படையெடுப்பைத் தொடங்க சரியான களமாக இருக்கும். 550 க்கும் மேற்பட்ட துருப்புக் கூடாரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கிரிமியாவின் தலைநகரான சிம்ஃபெரோபோலுக்கு வடக்கே வந்துவிட்டதாக தெரிகிறது. இது கிரிமியாவின் முக்கிய துறைமுகத்தில் பல ரஷ்ய போர்க்கப்பல்கள் நங்கூரமிட்டதுடன் ஒத்துப்போனது. தெற்கு உக்ரேனிய பிராந்தியத்தின் நகர்வுகள் மால்டோவாவின் பிரிந்து சென்ற பகுதியான டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் இருக்கும் துருப்புக்களால் ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெலாரஸ் வழியும் தாக்குதல் துவங்கலாம் ஏன் என்றால், ரஷ்ய துருப்புக்கள் ஏற்கனவே ஒரு இராணுவ பயிற்சிக்காக அங்கே முகாமிட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/explained/how-large-is-russias-military-build-up-around-ukraine-411133/