செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

டேட்டிங் ஆப் வலையில் சிக்காதீர்கள்!

 ஆன்லைன் டேட்டிங் செயலிகள் காதலை வளர்க்க மட்டும் உதவாமல் மோசடியில் ஈடுபட கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் மனதை திருடுவதற்கு பதிலாக, தனிப்பட்ட விவரங்களை திருடிக்கொண்டு வங்கி கணக்கை காலி செய்யும் கூட்டம் அண்மை காலமாக அதிகரித்துள்ளது. எனவே, ஆன்லைன் செயலிகளில் அதிக கவனமுடன் இருப்பது அவசியமாகும்.

டிண்டரின் கூற்றுப்படி, இந்த மோசடியில் ஈடுபடுவோர் அன்பாக பேசுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் உண்மையாக கணக்கு வைத்திருப்பார்கள். எனவே, கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி காதலர் தின மோசடியில் சிக்கிவிடாமல் பாதுகாத்துகொள்ளுங்கள்.

நேரடியாக பேச அழைப்பது

டேட்டிங் செயலி இல்லாமல் வேறு செயலிக்கு வர சொன்னாலோ அல்லது நேரடியாக மொபைல் நம்பரை கேட்டாலோ, மோசடி செய்பவரால் ஏமாற்றுதவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

உண்மையாக இருப்பது

பாசம் அல்லது அதீத அக்கறை காட்டுவது, மோசடி கும்பலின் முதல் படியாகும். அதில் எச்சரிக்கை வேண்டும். விரைவில் உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதும், பெரியளவில் வாக்குறுதிகள் அளிப்பதும், திருமணம் செய்துக்கொள்ளலாமா என உடனே கேட்பவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

சந்திப்பை தவிர்க்கவும்

பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் சந்திக்கலாம் என கூறிவிட்டு கடைசி நிமிடத்தில் ப்ளானை ரத்து செய்வார்கள். கேட்டால் மருத்துவ அல்லது குடும்ப அவசரநிலை என காரணங்கள் கூறுவார்கள். இது, உங்களிடம் பணம் உதவு கேட்பதற்கான முயற்சியாகும்.

தனிப்பட்ட தகவல்

உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது தனிப்பட்டதாகக் கருதப்படும் வேறு ஏதேனும் தகவலைப் பகிருமாறு மோசடி செய்பவர்கள் உங்களிடம் கேட்பார்கள்.

சவால்கள்

ஒருவரின் தனிப்பட்ட நிதி நெருக்கடிகள் அல்லது தேவைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுப்பார்கள். இது, சாட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலே நிகழந்தால், ஆழமான ஏமாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

உள்ளுணர்வை நம்புங்கள்

உங்கள் உள்ளுணர்வுதான் எப்பொழுதும் சிறந்த தீர்ப்பை வழங்கும். ஏதாவது சரியாக இல்லை எனில், உடனே பிளாக் செய்வது நல்லதாகும்.

ரிவர்ஸ் இமேஜ் தேடுதல் முயற்சியுங்கள்

மோசடி செய்பவர்கள் தங்களுடைய சொந்த புகைப்படங்களை அரிதாகவே பயன்படுத்துகின்றனர், எனவே அவர்களது ப்ரொபைல் போட்டோ, வேறு எதேனும் தளத்தில் உள்ளதா என்பதை கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

கேள்வி கேளுங்கள்

எல்லா கேள்விகளையும் கேட்பதன் மூலம் தனிப்பட்ட முறையில் அந்நபரை தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு அவர்கள் கூறும் பதிலில் உள்ள சீரற்ற உண்மைகள், கதைகள், தெளிவற்ற பதில்களை நன்கு கவனியுங்கள்.

சமூக ஊடகத்தை பிரைவட்டாக மாற்றுங்கள்

மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் தளங்களில் பகிரப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்களை நன்றாகப் புரிந்துகொண்டு குறிவைக்கலாம்.குடும்பம், நண்பர்கள், பணியிடம், வீட்டு முகவரி, மொபைல் நம்பர் , தினசரி வேலை போன்றவற்றை பதிவிடுவதை தவிருங்கள்.

பணம் அனுப்பாதீர்கள்

ஆன்லைனில் சந்தித்து பேசும் நபர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் பணம் அனுப்பாதீர்கள் என சைபர் செல் டெல்லி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, கிரெடிட் கார்டு எண்கள், வங்கிக் கணக்குத் தகவல், வயர் பரிமாற்றங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிராதீர்கள் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/technology/valentines-day-romance-scams-here-how-to-stay-safe-411424/