தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வரும் 19-ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப் பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன.
பிரசாரத்தில் கொரோனா விதிகளை எந்த கட்சியினரும் கடைப்பிடிக்கவில்லை என்பதை சமூக வலைதளங்களில் வெளியாகும் பிரசார புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.
சூறாவளி பிரசாரம் செய்துவரும் அரசியல் கட்சியினரின் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் மட்டும் காணொலி முறையில் தமிழகமெங்கும் பிரசாரம் செய்து வருகிறார்.
ஆனால், பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், ஆளும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பிரசாரம் செய்யும்போது மட்டும் முகக் கவசத்தை எடுத்துவிடுகின்றனர். பிற நேரங்களில் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடன் வரும் கட்சியினர் சமூக இடைவெளியை மறந்து விடுகின்றனர்.
பெரிய கட்சிகளின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதால் இவர்களை காண்பதற்காகவும் இவர்களின் பேச்சை கேட்பதற்காகவும் அலைகடலென பொதுமக்களும், கட்சியினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர்.
அப்போது அவர்களில் பலரும் முகக் கவசத்தை அணியாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களில் காண முடிகிறது.
அரசியல் ஆலோசனைக் கூட்டங்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே பங்கேற்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல இடங்களில் 100 சதவீதம் பேர் அத்தைகய கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
தெருக்களில் இறங்கியும் வீடுவீடாகவும் வாக்குச் சேகரிக்க 20 பேர் மட்டும் செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களே 100க்கும் மேற்பட்டோரை தெருக்களில் காண முடிகிறது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை இன்று (பிப்.11) வரை பேரணிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், நகரின் பல பகுதிகளில் ஏற்கனவே பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பல்வேறு கட்சியினரை தெருக்களில் காண முடிகிறது.
கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், அரசியல் கட்சியினர் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் அனைவருக்குமே நல்லது என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன.
திமுக தரப்பைப் பொறுத்தவரைக் கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது.
இப்போதும் அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/urban-polls-elections-propaganda-politics-covid-restrictions409883/