திங்கள், 7 பிப்ரவரி, 2022

டெல்லியில் சூடுபிடிக்கும் நீட் விவகாரம்

 

தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது. ஆனால், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியதையடுத்து, பிரச்சினை விஷவரூபம் எடுத்தது. ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன

இதற்கிடையில், நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

மேலும், இவ்விவகாரம் குறித்து Zero hourஇல் விவாதிக்க திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். வேண்டுமானால், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதித்துகொள்ளுங்கள் என்றார்.

விவாதிக்க அனுமதி கிடைக்காததால், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரி தி.மு.க எம்.பி., பி வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

நீட் தேர்வு விலக்கு அளிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது பற்றி முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

தலைமை செயலகத்தில் இன்று காலை சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தது.

கூட்டத்தில், நீட் மசோதா விஷயத்தில் ஆளுநர் கேட்டிருக்கும் விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளித்து மீண்டும் மசோதாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதால் தமிழ்நாட்டில் பெரும் விவாதம் நடைபெறும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7 ஆம் தேதி டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டுள்ளார்.

அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் மசோதா தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/india/dmk-mp-moves-private-bill-seeking-education-under-state-list-406954/