18 7 2022
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னையில் மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது.
ஒன்றிய மின் துறை 7 முறையும், மேல் முறையீட்டு ஆணையம் 1 முறையும், ஆர்.இ.பி.சி.எஃப்.சி (REPCFC) 5 முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையும் என ஒட்டுமொத்தமாக 28 முறை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், இன்று வேறு வழியில்லாமல், குறிப்பாக அதலபாதாளத்தில் இருக்கக்கூடிய மின்சாரத்துறையை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தில் வரக்கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி நாம் அதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இப்போது இருக்கக்கூடிய சொந்த மின் உற்பத்தி என்பது வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் மின் உற்பத்தியை மின்சார வாரியத்தின் உற்பத்தியுடன் இணைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலைமைகளில், குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில், சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறையை பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில், மேம்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில், எந்த வகையிலும் அடித்தட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில், மின் கட்டண மாற்றங்கள் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன்.
கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.
2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.
201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது.
2 மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும்.
2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.
விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/electricity-tariff-will-be-increased-in-tamil-nadu-announced-by-minister-senthil-balaji-481263/