புதன், 6 ஜூலை, 2022

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மூளை நரம்புகளை சேதப்படுத்துகிறதா?

 6 7 2022 

கொரோனா நோய் தொற்றால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூளையின் ரத்த நாளங்களை சேதப்படுத்துவதாக வாஷிங்டன்னில் உள்ள அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தொற்று உருவான காலத்தில் பலருக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும் அது தொடர்பான ஆய்வில் கொரோனா வைரஸ் மனித செல்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை தடுப்பதற்கான மருந்துகளையும் உற்பத்தி செய்தனர். அதே நேரத்தில் தொற்றின் தன்மை, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொற்றின் மாறுபாடு எவ்வாறு செயல்படுகிறது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வில் கொரோனா தொற்றால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூளையின் ரத்த நாளங்களை சேதப்படுத்தும் என்றும், குறுகிய மற்றும் நீண்ட கால நரம்பியல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நரம்பியல் கோளாறுகள் மற்றும் பக்கவாதம் (NINDS) ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தொற்றால் இறந்த 9 பேரின் உடல்களை ஆய்வு செய்தனர்.

 

24 வயது முதல் 73 வயது வரைஉள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 9 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்தபோது, தொற்றின் நோய் எதிர்ப்பு சக்தி மூளை நரம்புகளை பாதித்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ இயக்குநரும், ஆய்வின் மூத்த ஆசிரியருமான அவிந்திர நாத் தெரிவிக்கும் போது, முதலில் உடற்கூறாய்வு செய்தபோது, மூளையின் ரத்த நாளங்கள் சேதம் அடைந்ததற்கான காரணம் புரியவில்லை என்றும், பின்னர் 9 பேரின் மூளைகளிலும் ஒரே வடிவிலான செல்கள் இருப்பதை கண்டுபிடித்ததாகவும் கூறினார்.

கொரோனா தொற்று நோயாளிகளின் மூளையில் உள்ள எண்டோடெலியல் செல்களின் மேற்பரப்பில், ஆன்டிபாடிகள் ஆன்டிஜென்களை (வெளிநாட்டு பொருட்கள்) பிணைக்கும்போது உருவாகும் மூலக்கூறுகள், நோய் எதிர்ப்பு படலங்களில் வீக்கத்தைத் தூண்டுவதன் மூலம் திசுக்களை சேதப்படுத்தும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நோயாளிகளின் மூளையில் SARS-CoV-2 கண்டறியப்படவில்லை என்றும் வைரஸ் நேரடியாக மூளையை பாதிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.

 

நோய் எதிர்ப்பு படலங்களின் வளர்ச்சியைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட சிகிச்சைகள் கவனிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஆராய்ச்சியாளர் அவிந்திர நாத், தொற்று பாதித்த பிறகு நரம்பியல் அறிகுறிகளுக்கான சாத்தியமான சிகிச்சைகள் இருக்கலாம் என்றும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்



source https://news7tamil.live/the-immune-system-damages-brain-nerves.html

Related Posts: