சனி, 16 ஜூலை, 2022

இலங்கையின் புதிய அதிபர்?…அரசியல் சாசன சட்டம் சொல்வது என்ன?…

 

இலங்கையில் அதிகாரங்களின் உச்சமாக கருதப்படும் பதவி அதிபர் பதவி. பிரதமரை  நியமிப்பது முதல் முக்கியமான கொள்கை முடிவுகளை தீர்மானிப்பது வரை நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் அதிகாரங்களைக் கொண்ட அதிபர் பதவி தற்போது அந்நாட்டில் காலியாக உள்ளது. இத்தனை அதிகாரங்களையும் கொண்ட பதவியை தன்னகத்தே வைத்திருந்தும், உணவு, மருந்து, எரிபொருள் என அன்றாட தேவைகளுக்கு மக்களை அல்லாட வைத்த குற்றச்சாட்டுக்கு உள்ளான கோத்தபய ராஜபக்சே, மக்கள் கிளர்ச்சியால் அந்த பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டிருக்கிறார்.

அதிபர் மாளிகைக்குள் புகுந்து அவரது படுக்கை அறையில் படுத்துக்கொண்டே போராட்டக்காரர்கள் வீடியோ வெளியிடும் அளவிற்கு இலங்கையில் வெடித்த மக்கள் கிளர்ச்சி உலகையே அந்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தது. இந்த எழுச்சியின் முன்பு தாக்குபிடிக்க முடியாமல் முதலில் மாலத் தீவிற்கும் பின்பு சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்தபடியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உள்நாட்டில் இருந்தால் பதவியை ராஜினாமா செய்தவுடன் தான் கைது செய்யப்படலாம் அல்லது, பொதுமக்கள் ஆத்திரத்தின் வெளிப்பாட்டை எதிர்கொள்ள நேரிடலாம் என்கிற எண்ணத்தில் முன்னெச்சரிக்கையாக வெளிநாட்டிற்கு சென்று கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிபர், பிரதமர் பதவிகளை அடுத்தடுத்து வைத்துக்கொண்டு ராஜபக்சக்கள் இலங்கையில் நடத்திவந்த சாம்ராஜ்யம் முற்றிலும் வீழ்ந்துவிட்டது.  பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச ராஜனாமா செய்ய,  தற்போது அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

அதிபர் பதவி காலியாக உள்ள நிலையில் இலங்கையில் இனி அடுத்து என்ன?….இந்த கேள்விக்கான பதிலாக இலங்கையின் அரசியல் சாசன சட்டப்பிரிவு 40ல் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

1) அதிபர் பதவி காலியானவுடன் உடனடியாக இடைக்கால அதிபராக பிரதமர் செயல்பட வேண்டும்

2) அதிபர் பதவி காலியாகும்போது பிரதமர் பதவியும் காலியாக இருந்தால் நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார்

3) அப்படி இடைக்கால அதிபராக பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவர் வகித்து வந்த பிரதமர் பதவியை கவனிப்பதற்காக இடைக்காலமாக ஒருவரை நியமிக்க வேண்டும்.

4) அதிபர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்குள் புதிய அதிபர் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

5) நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ரகசிய  வாக்கெடுப்பு முறையில் பெரும்பான்மையான எம்.பிக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

6) அதிபர் பதிவி காலியாக உள்ளபோது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால், புதிய நாடாளுமன்ற அவை கூடியதிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்,

7) அவ்வாறு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர், ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்தவரின் பதவிக்காலம் எவ்வளவு எஞ்சியுள்ளதே அந்த காலத்திற்கு அதிபராக செயல்படுவார் என்று இலங்கையின் அரசியல் சாசனம் கூறுகிறது. அதன் பிறகு நடைபெறும் தேர்தலில் அதிபரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 18ந்தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2024ம் ஆண்டு நவம்பர் 18ந்தேதி வரை உள்ள நிலையில் சுமார் இரண்டே கால் வருடங்களுக்கு முன்பாகவே மக்கள் கிளர்ச்சி எதிரொலியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த இரண்டே கால் வருடமும் இலங்கையின் புதிய அதிபராக இருக்கப்போவது யார் என்பதுதான் அந்நாட்டில் தற்போது மில்லியன் டாலர் கேள்வி. நாடாளுமன்ற எம்.பி.க்களால்தான் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றாலும், மக்களின் விருப்பம் என்ன என்பதை முன்னிறுத்தியே கட்டாயம் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு ஒவ்வொரு எம்.பிக்கும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் என்றே கருதப்படுகிறது. மக்களால் வெறுக்கப்பட்ட பிரதமரும், அதிபரும் மக்கள் கிளர்ச்சியால் தூக்கி எறியப்பட்டதும், அதிபர் மாளிகை ஆக்கிரமிக்கப்பட்டது முதல் பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது வரை நிகழ்ந்த களேபரங்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும்போது ஒவ்வொரு எம்.பியின் கண்முன்னே வந்துபோகத்தானே செய்யும்.

தற்போதைய இலங்கை அரசியல் கள நிலவரப்படி புதிய அதிபருக்கான பந்தயத்தில் 4 பெயர்கள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

1) தற்போது இலங்கையின் இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபர் பதவிக்கான போட்டியில் முன்னிறுத்தப்படுபவர்களில் ஒருவர். இவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு எம்.பி மட்டுமே உள்ளார். ஆனால் இலங்கையின் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஒரு பிரிவினரும், வேறு சில கட்சிகளும் இவரை அதிபராக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 6 முறை பிரதமராக இருந்தது, நிதியமைச்சராக பதவி வகித்து அனுபவம் பெற்றது, தற்போது நிலவும் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதிஉதவி பெறுவதற்கு சர்வதேச கண்காணிப்பு நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். அவர்களில் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவும் ஒருவர் என தகவல்கள் உலாவுகின்றன.

2) இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவும் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அதிபரான ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா,  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர். அந்த கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 50 எம்.பிக்கள் உள்ளனர்.மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றால்தான் அவர் அதிபர் ஆக முடியும். மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவி விலகிய பிறகு புதிய பிரதமராக பொறுப்பேற்க அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச முதலில் சஜித் பிரேமதாசாவைத்தான் அழைத்தார். ஆனால் அதிபர் பதவி விலகவேண்டும் என்ற ஒற்றை வலியுறுத்திலிலேயே உறுதியாக நின்று பிரதமர் பதவியை நிராகரித்த சஜித் பிரேமதாசவின் நடவடிக்கை மக்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்பட்டது. மேலும் அதிபருக்கு எதிரான பிரம்மாண்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்ததில் இவரது கட்சிக்கும் முக்கிய பங்கு இருந்தது. எனவே மக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டி பிற கட்சி எம்.பிக்களின் ஆதரவை பெற சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.

3) ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை எதிர்த்து அந்த கட்சியின் எம்.பி சரத்பொன்சேகாவும் களம் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போர்  நடைபெற்றபோது அந்நாட்டு ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவும் அதிபர் ஆக முயற்சி எடுத்துவருகிறார். இறுதிக்கட்ட போரின்போது இலங்கை தமிழர்களுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் சரத்பொன்சேகா. 2010ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிடம் தோல்வியுற்ற சரத்பொன்சேகா அதிபர் ஆகும் முயற்சியை தற்போது மீண்டும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் வேறு சில கட்சி எம்.பிக்களும் தம்மை தொடர்புகொண்டு இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கேட்டுக்கொண்டதாகக் கூறியுள்ள சரத்பொன்சேகா, பெரும்பாலான எம்.பிக்கள் தம்மை தேர்வு செய்வதாக இருந்தால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

4) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் எம்.பியான டுல்லாஸ் அலகாப்பெருமாவும் அதிபர் தேர்வுக்கான போட்டியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 117 எம்.பிக்களை கொண்ட ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவில் ஒருபிரிவினர் ரணில் விக்ரமசிங்கேவையும், மற்றொரு பிரிவினர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த டுல்லாஸ் அலகாப்பெருமாவும் அதிபர் தேர்தலில் களம் இறங்க ஆயுத்தமாகி வருவதால் ஆளுங்கட்சியின் ஓட்டுக்கள் பிரியும் என்று கூறப்படுகிறது.  முன்னாள் பத்திரிக்கையாளரான டுல்லாஸ் அலகாப்பெருமா செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் நடைபெற உள்ள அதிபர் தேர்வில் போட்டி பலமாக இருக்கும் என்பதால் தமிழ் எம்.பிக்களின் வாக்குகளும் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட நாட்டின் பிரதமராலேயே திவால் என அறிவிக்கப்பட்ட இலங்கை கடுமையான அந்நியச் செலவாணி தட்டுப்பாட்டில் தவிக்கிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றை அந்நாடு இறக்குமதி செய்ய முடியாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே அல்லல்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலை சமாளிக்க சர்வதேச கண்காணிப்பு நிதியத்திலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. இந்த சூழலில் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளவர் இலங்கையின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கவும், அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும்,

– எஸ்.இலட்சுமணன்

source https://news7tamil.live/sri-lanka-president-election-in-parliament.html