சனி, 2 ஜூலை, 2022

கொரோனா தொற்று: திருச்சி விமான நிலையத்தில் உஷார்

 

1 7 2022 

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதில் நேற்று புதிதாக 62 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த  எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றது.

இந்நிலையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய பயணி ஒருவரின் சான்றிதழ்களை சரி பார்க்கும் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றுடன் வந்தது தெரிய வந்தது. விமான நிலைய அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அதேபோல் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் மேற்கண்ட இரு விமானத்தில் வந்த மொத்த பயணிகளின் விபரங்களையும் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

 கொரோனா தொற்று உடைய இரண்டு பயணிகள் விமான மூலம் திருச்சி வந்தது இன்னும் திருச்சியில் கொரோனா தொற்றை அதிகரித்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதே நேரம் கொரோனா தொற்றுடன் சக பயணியாக விமானத்தில் பயணித்த நபரால் மொத்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

 க. சண்முகவடிவேல் 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-two-passenger-tested-positive-covid-in-trichy-airport-473670/