ஞாயிறு, 10 மே, 2026

8 அமைச்சர்களுடன் இன்று பதவி ஏற்பு

 10 05 2026 

tvk

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் த.வெ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். 

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சியமைக்க த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, த.வெ.க தலைவர் விஜய், தமிழக முதல்வராக ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது முதற்கட்டமாக முதலமைச்சர் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

கட்சியில் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், செங்கோட்டையன்,  அருண் ராஜ் (ஐஆர்எஸ்),  ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார்  ஆகியயோர்  பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணி துறை அமைச்சராக செங்கோட்டையன்,  நகராட்சி நிர்வாகத்துறை துறை  என்.ஆனந்த்,  மின்சாரம் சி.டி.ஆர். நிர்மல்குமார், விளையாட்டு மற்றும் மது விலக்கு துறை - ஆதவ் அர்ஜுனா,  ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்,  சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா,  பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ்,  பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார்,  விஸ்வநாத் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-chief-vijay-set-to-become-next-chief-minister-of-tamilnadu-with-9-member-cabinet-11818202