தனிப்பெரும் கட்சி; ஆனால் இழுபறி -வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ் 7 5 2026
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு இல்லாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் பட்டினப்பாக்கம் அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கட்டையன் ஆகியோருடன் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு விஜய் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகள் தொடர்பான முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதல்வர் அளவிற்கு இணையான சிறப்பு பாதுகாப்பு வளையம் கொண்ட கான்வாய் வாகனங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கையின் போது கூட இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, விஜய் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு முன்பே, அவருக்காக வைக்கப்பட்டிருந்த அந்த நான்கு கான்வாய் வாகனங்களும் திருப்பிப் பெறப்பட்டு தலைமைச் செயலகம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன. பாதுகாப்பு வாகனங்கள் இன்றி விஜய் தனது இல்லத்திற்குப் புறப்பட்ட நிலையில், அவர் தானாக முன்வந்து இந்த பாதுகாப்பு வாகனங்களைத் திருப்பி அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விஜயுடன் காவல் துறையினர் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-leader-vijays-security-convoy-withdrawn-11808029





