/indian-express-tamil/media/media_files/2026/05/06/thamimum-ansari-on-meeting-with-dmk-mk-stalin-resign-chidambaram-tamil-news-2026-05-06-22-08-29.jpg)
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் புரட்டி போட்டுள்ளது. அதே நேரத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இது தி.மு.க-வினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தி.மு.க கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், வென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, தனது கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது மு.க.ஸ்டாலினிடம் பேசிய அவர், "நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. நீங்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியினரின் விருப்பமாக உள்ளது. சொல்லப்போனால், தமிழ்நாட்டின் விருப்பம் அதுதான். அதனால், சிதம்பரம் தொகுதியில் நான் ராஜினாமா செய்துவிடுகிறேன். நீங்கள் போட்டியிடுங்கள் என்று கூறினேன். இதனைக் கேட்டு மனம் உருகிய மு.க.ஸ்டாலின், என் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு, இந்த வார்த்தையை நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் சட்டமன்றம் சென்று சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலினை சந்தித்தது குறித்து தமீமுன் அன்சாரி தனது முகநூலில் பதிவில் கூறியிருப்பதாவது:-
25 ஆண்டு காலமாக எதிர் முகாமில் இருந்த சிதம்பரம் தொகுதியை திமுக மற்றும் கூட்டணி கட்சியின் துணையோடு வென்றெடுத்த உற்சாகத்தை முழுமையாக கொண்டாட முடியாத அரசியல் சூழல் அமைந்தது வருத்தம் தான். இந்நிலையில் இன்று நானும், ம.ஜ.க பொருளாளர் கேப்டன் சையது முகமது ஃபாருக் அவர்கள் உள்ளிட்ட பலரும் காலையில் சென்னையில் உள்ள அண்ணன் M.R.K. பன்னீர் செல்வம் அவர்களுடைய இல்லத்துக்கு சென்றோம். அவர் வழக்கமான உற்சாகத்துடன் அன்புடன் வரவேற்றார். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அதன்பிறகு அங்கிருந்து நாங்கள் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய இல்லத்திற்கு புறப்பட்டோம். நான் உள்ளே சென்றதும் அங்கே முதல்வர் அமர்ந்திருந்தார். அவருடன் அன்பிற்கினிய துர்கா அம்மா அவர்களும், தேமுதிக-வின் தலைவர் பிரேமலதா அண்ணியும், நண்பர் சுதீஷ் எம்பி அவர்களும், தம்பி விஜயபிரபாகரன் அவர்களும் இருந்தனர். மறுபுறத்தில் அண்ணன்கள் துரைமுருகன், ஓ.பன்னீர் செல்வம், ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, TRP.ராஜா உள்ளிட்டோரும் இருந்தனர்.
முதல்வர் அவர்கள் என்னைப் பார்த்ததும், 'வாங்க அன்சாரி' என்று உற்சாகம் பொங்க எழுந்தவர், அப்படியே அணைத்துக் கொண்டார். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. சவால் மிக்க ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது அவருக்கு பூரிப்பாக இருந்ததை உணர முடிந்தது. வாக்கு வித்தியாசத்தை கேட்டார். சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தார். என் கையை பற்றி பிடித்துக் கொண்டு வாழ்த்து கூறினார். எனக்கு வெற்றி பெற்ற மகிழ்ச்சி இல்லை என்றேன். நீங்கள் ஆட்சி இழந்ததை விட, தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது மிகவும் துயரமாக இருக்கிறது என்றேன்.
என்னை உற்று நோக்கியவரிடம், நீங்கள் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியில் ராஜினாமா செய்கிறேன், நீங்கள் போட்டியிடுங்கள் என்று கூறினேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர், பற்றிப்பிடித்த என் கையை அழுத்தியவாறு, அந்த வார்த்தையை பேசக்கூடாது; அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்றார். அருகில் இருந்த துர்கா அம்மா அவர்கள் கூர்ந்து கவனித்தார்.
அதன் பிறகு என்னை 'உட்காருங்கள் போகலாம்' என உட்கார வைத்து விட்டார். அதன் பிறகு அங்கு வந்தவர்களை எல்லாம் சந்தித்து வழி அனுப்பினார். அவரிடம், மஜக நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியதும் அவர்களுடன் படம் எடுத்து உற்சாகப்படுத்தினார். அண்ணன் M.R.K. பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டலில், எனக்காக தொகுதியில் பாடுபட்ட திமுக நிர்வாகிகளையும் அவர் சந்தித்தார். அங்கு வந்த பலரையும் கை கொடுத்து வழி அனுப்பினார். சிலர் கலங்கிய போது அவர்களை தட்டி உற்சாகப்படுத்தி அனுப்பினார். சிலரை உரிமையோடு கண்டித்தார்.
ஒரு சிலர் காலில் விழும் போது அதை தடுத்து நிறுத்தியவர், அதை கண்டித்தார். அப்போது தன்னை ஒரு சுயமரியாதைக்காரர் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் செயல்பட்டதை பார்த்து மகிழ்ந்தேன். இச்சந்திப்பின் போது, அன்பிற்கினிய துர்கா அம்மா அவர்கள், என்னை அருகில் அழைத்து நலம் விசாரித்தார். அப்போது 'அவரை இரண்டு நாள் கழிச்சு போகலாமே' என்றேன். கேட்காமல் உடனே தொகுதிக்கு போய்விட்டார் என்றார் சிரித்தபடியே...! இதை ஒரு குடும்பத் தலைவியின் அக்கறை என்பதா? அல்லது நம் தமிழ் சமூகத்தில் இருக்கும் ஒரு அம்மாவின் பாசம் என்பதா? என மனதிற்குள் நினைத்தேன்.
நான் அவரிடம், தளபதி வெற்றி பெற்றிருந்தால், மக்கள் ஆதரவு கூடியிருப்பதாக நாம் நினைத்திருப்போம். இப்போது எதிர்த்தரப்பினர் கூட வேதனைப்படும் அளவிற்கு அனுதாபத்தால் உலக தமிழர்களிடம் அவர் உயர்ந்து நிற்கிறார் என்று கூறினேன். உடனே, துர்கா அம்மா அவர்கள், அப்படியா? என்றதும், அருகில் இருந்த பிரேமலதா அண்ணியார் அவர்கள், ஆமாம். எல்லோருமே அப்படித்தான் நினைக்கிறார்கள் என்றார்.
25 நிமிடங்கள் கடந்த பிறகு நான் கிளம்ப தயாரானதும், என்ன அன்சாரி கிளப்புறீங்களா? என்றார். 'ஆமா அண்ணே' என்று அருகில் சென்றேன்.
உடனே கையை பற்றி பிடித்துக் கொண்டு 'உற்சாகமாக பணியாற்ற வேண்டும்' என்றார் புன்னகையுடன்! மீண்டும் நான் ஏற்கனவே சொன்னதை வலியுறுத்திய போது, அந்த பேச்சையே பேசக்கூடாது என்று உரிமையோடு கண்டித்தார். பிரிய மனம் இல்லாத சூழல்!
உடனே, அப்புறம் வாங்க நம்ம ஃப்ரீயா பேசுவோம் என்றார்.
புறப்படும்போது எனக்காக அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றினார் என்பதை தெரிவித்தேன்.
கூடவே அவரது மகனும் மாவட்டத்தின் பொருளாளருமான சேர்மன் கதிரவன் அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து பணியாற்றியதையும், திமுகவின் சிதம்பரம் நகரச் செயலாளர் KRS.ரவி உட்பட திமுக ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றியதையும் தெரிவித்தேன்.
கூடுதலாக அங்கு எங்களோடு அண்ணன் M.R.K பன்னீர்செல்வம் அவர்கள் அழைத்து வந்த திமுக நிர்வாகிகளுடன் அவர் படம் எடுத்துக் கொண்டார்.
இன்றைய சந்திப்பின் போது அவர் ஆட்சியை இழந்ததை பற்றியோ, தனது தொகுதியில் மக்கள் நன்றி மறந்து விட்டது பற்றியோ துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும், மேலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்ததை மட்டுமே பார்க்க முடிந்தது. அவர் தமிழர்களின் தளபதி அல்லவா?
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thamimum-ansari-on-meeting-with-dmk-mk-stalin-resign-chidambaram-tamil-news-11807526





