நீரிழிவு நோய் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது என்பது அண்மைக்காலங்களில் பேசிவரும் அம்சமாக இருக்கிறது. இதில் அதிர வைக்கும் புள்ளி விவரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இதன்படி அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள மாநகரமாக முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி. 40 சதவிகித டெல்லிவாசிகள் சர்க்கரை நோயாளிகளாக உள்ளதாக கூறுகிறது இந்த ஆய்வு. இதன் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அதிகரிக்கும் சர்க்கரைநோய் என்ற தலைப்பில் அசோசெம் என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐடி ஊழியர்கள் உட்பட 18 விதமான தனியார் நிறுவன ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சராசரியாக 500 ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி தலைநகர் டெல்லி, அதிக சர்க்கரை நோயாளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.
டெல்லி மக்கள் தொகையில் 42 புள்ளி 5 சதவிகிதத்தினர் சர்க்கரை நோயாளிகள் என்கிறது அசோசெம் புள்ளி விவரம். 38 புள்ளி 5 சதவிகித சர்க்கரை நோயாளிகளுடன் மும்பை இரண்டாம் இடத்திலும், 36 சதவிகித நோயாளிகளுடன் அகமதாபாத் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது. பெங்களூரின் மொத்த மக்கள் தொகையில் 26 புள்ளி 5 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும் 24 புள்ளி 5 சதவிகித சர்க்கரை நோயாளிகளுடன் சென்னை 5 ஆம் இடத்திலும் இருக்கிறது என்கிறது ஆய்வு.
ஹைதராபாத்தில் 22 புள்ளி 6 சதவிகிதம் பேரும், கொல்கத்தாவில் 19 புள்ளி 7 சதவிகிதம் பேரும் என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வியல் முறைகளிலும், உணவுப்பழக்கங்களிலும் மாற்றங்கள் செய்யாவிட்டால் 2035 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பனிரென்டரை கோடியை கடக்கும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு.
பதிவு செய்த நாள் : August 02, 2016 - 08:20 PM