செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மீண்டும் ஒரு மாட்டிறைச்சி சம்பவம்: துப்பாக்கி முனையில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அவரது பைக்கில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக சில மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமிய பெண்கள் இருவர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. 

மேலும் கடந்த சில வாராங்களுக்கு முன்பாக பாஜக ஆளும் குஜராத்தில் தலித் இளைஞர்கள் நான்கு பேர் மாட்டுத் தோல் வைத்திருந்ததாக கூறி அவர்கள் மேல் கொடூர தாக்குதல் நடந்தது. அந்த சம்பவமும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் தலித் மக்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இப்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக துப்பாக்கி முனையில் கொடூரமாக தாக்கப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சி கொண்டு சென்ற இளைஞரை வழிமறித்து சில இளைஞர்கள் துப்பாக்கி முனையில் கொடூரமாக தாக்குகின்றனர், இந்த தாக்குதல் சம்பவத்தை ஒருவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். 

மாட்டிறைச்சி கொண்டு சென்றவரை தாக்குகின்றவர்கள் பசுமாடு அவர்களின் தாய் போன்றது என்றும் அதனை எப்படி கொலை செய்யலாம் எனவும் கூறி தாக்குகின்றனர். அந்த கொடூர இளைஞர்களிடம் சிக்கி கொண்ட இளைஞர் அவர்களிடம் மன்னிப்பு கோரி கதறுகிறார், ஆனாலும் மனமிரங்காத அந்த மர்ம இளைஞர்கள் அவரை இன்னும் கொடூரமாக தாக்குகின்றனர். 

இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேட்ரிக் சின்ஹா என்பரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் யார் என்று தெரியவில்லை.
  
இது போன்ற சம்பவங்களால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவிலும் இது போன்ற சம்பவங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

அமெரிக்க ஊடகம் ஒன்றும் இந்த மாட்டிறைச்சி சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அநியாயமாக தாக்கப்படும் மக்களை இந்திய அரசாங்கம் காப்பற்ற வேண்டும் என்றும் அந்த செய்தி ஊடகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
http://ns7.tv/ta/cow-meat-issue-youth-attacked-four-unidentified-person-bjp-rule-rajastan.html

Related Posts: