வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

ஜாலியன் வாலாபாக் படுகொலை



ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது எல்லாருக்கும் தெரியும்...
ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் ஏன் அத்தனை மக்கள் (20,000) கூடியிருந்தார்கள்??? யாருக்காக கூடிய கூட்டம்..? தகவல் தொழில்நுட்பம் சுத்தமாக இல்லாத அக்காலத்தில் வெறும் இரண்டு நாளில் எப்படி அவ்வளவு பெரிய கூட்டம் நடந்தது?
அதுகுறித்து பார்க்கலாமா?
1919, பிப்ரவரி 6 ல் ரௌலட் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அச்சட்டத்தின்படி விடுதலைப் போராட்ட வீரர் எனச் சந்தேகப்படும் யாரையும் விசாரணை இன்றி கைது செய்து, எவ்வளவு காலம் வேண்டுமாயினும் சிறையில் வைத்திருக்கலாம். அவர்கள் வழக்குரைஞர் வைத்து வாதாட அனுமதி இல்லை.
மகாத்மா காந்தி, இந்த சட்டங்கள் தேவை இல்லை என்று அறிவித்து, ஓத்துழையாமை இயக்கம் நடத்த திட்டமிடுகிறார். காந்தியின் இந்த புதிய அணுகுமுறை, மக்களிடையே பரபரப்பாகிறது. நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 1919, ஏப்ரல் 6 ல் பந்த் நடத்த அழைப்பு விடுக்கிறார்.
1919, ஏப்ரல் 9ம் நாள் ராம நவமி. அன்று ஓர் ஊர்வலம் நடக்கிறது. இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அனைவரும் ஊர்வலத்தில் பங்கு பெறுகின்றனர். அதனால் அங்கு அடக்குமுறைக்கு எதிரான கோஷம் எழுப்பப்படுகிறது.
கடுப்பான ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றுமைக்கு யார் காரணம் என்று விசாரித்ததில் டாக்டர் சைபுதீன் கிச்சுலு & டாக்டர். சத்யபால் என்ற இரு தலைவர்கள்தான் காரணம் என்று தெரிகிறது. ஆங்கிலேயர்கள் இருவரையும் கைது செய்கிறார்கள்.
1919, ஏப்ரல் 10 ம் நாள் பஞ்சாப் முழுவதும் கிளர்ச்சியும் கலகமும் பரவியது. மக்கள் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரி, துணை ஆணையரைச் சந்திக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்களை நோக்கி துப்பாக்கி வெடித்தது. இதனால் மக்களின் கோபம் வெடித்தது.
1919, ஏப்ரல் 11 அன்று ஜலந்தரிலிருந்து ஜெனரல் டையர் வருகிறார்; நகரைக் கைப்பற்றுகிறார். நகரம் துணை ஆணையரின் கைக்குள் வந்தது.
1919, ஏப்ரல் 13 அன்று பைசாகி என்ற சீக்கிய புத்தாண்டு தினம். அறுவடைத் திருநாளும் கூட. அன்று மாலை ஜாலியன் வாலாபாக்கில் ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. கிராமத்திலிருந்தும், சுற்றியுள்ள இடங்களிலிருந்தும் சுமார் 20,000 மக்கள் கூடினர். சுமார் 4.30க்கு கூட்டம் துவங்கியது. அதன் பின் ஒரு மணி நேரம் சென்று, ஜெனரல் டையர் அங்கே சுமார் 150 ட்ரூப்புகளுடன் வருகிறார். முன் வாசல் வழியாக, இருவர் கூட சேர்ந்து செல்ல முடியாத சின்ன சந்தின் வழியாக, அவர்கள் வந்து நிற்கின்றனர். இதற்கு மேல் நடந்த அநியாயங்கள் மட்டுமே நமக்கு கற்ப்பிக்க பட்டிருக்கின்றன.
ஜாலியன் வாலாபாக் பொதுக்கூட்டம் தம் தலைவர்களான டாக்டர் சைபுதீன் கிச்சுலுவையும் டாக்டர். சத்யபாலையும் மீட்க கூடிய கூட்டம்...!
ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒற்றுமை பேரணியை வெறும் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று முடித்துக்கொண்டார்கள்..!
--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--