இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக பணம் வழங்கி முறைகேடு செய்ததற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது தமிழ்நாட்டில்தான். திருமங்கலம், ஶ்ரீரங்கம், ஆர்.கே.நகர் என்று ஒவ்வோர் இடைத்தேர்தலிலும் புதுப்புது ஃபார்முலாக்களை கழகங்கள் உருவாக்கித் தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.
வன்முறை, வாக்குச்சாவடி சூறை, கைப்பற்றுதல் போன்ற காரணங்களுக்காகத் தேர்தல் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதுவும் குறிப்பிட்ட வாக்குச்சாவடி, பகுதிக்கு மட்டும்தான் ரத்து அறிவிப்பு பொருந்தும். ஆனால், முதன்முறையாகப் பண விநியோகத்தைக் காரணம் காட்டித் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டது தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்குத்தான். முதலில் தேர்தலை தள்ளிவைத்த தேர்தல் ஆணையம், அதன்பிறகு அந்த இரண்டு தொகுதிகளுக்கும் அதிரடியாகத் தேர்தலையே ரத்து செய்தது. அதன்பிறகு, தற்போது ஆர்.கே நகர் சட்டமன்றத் தேர்தல் ரத்தாகியுள்ளது.
2016 மே 16-ம் தேதி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது, தமிழகத்தில் பரவலாக எல்லாத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணமும் பரிசுப் பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உச்சபட்சமாக அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், முதலில் தேர்தல் தேதியை மே 23-க்கு தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். இதர தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க பெரும்பான்மையைப் பெற்று, ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றார்.
தேர்தலைத் தள்ளிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.ஜே.பி வேட்பாளர் உள்ளிட்ட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அப்போது, தேர்தலை ஜூன் 13-ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்பிறகு, தஞ்சாவூர், அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர்கள் தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவிடம் மனு அளித்தனர். இதுதவிர, கட்சிகள் மாறிமாறி நீதிமன்றத்தை அணுகின. இதனால், கடைசியில் தேர்தலையே ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.
அப்போது, அரவக்குறிச்சி தொகுதியில் 7.12 கோடி ரூபாயும், 429.24 லிட்டர் மதுவும், 33.256 கிலோ வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அதேபோல், தஞ்சாவூரில் 75 லட்சம் ரொக்கமும், 2,145.12 லிட்டர் மதுவும் கைப்பற்றப்பட்டது. இதுதவிர, ஒரு லட்சம் புடவை மற்றும் வேட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அ.தி.மு.க வேட்பாளர், கிராமங்களுக்குக் கோயிலைப் புதுப்பிக்க, கிராம வளர்ச்சிக்கு என்று ஐந்து லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்தது தெரியவந்தது. அ.தி.மு.க மாணவர் அமைப்பு நிர்வாகி சரவணன் என்பவரிடமிருந்து மே 15-ம் தேதி 34 ஆயிரம் ரூபாயைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருந்தது. தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பிறகு, அரவக்குறிச்சியில் 5.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
http://www.vikatan.com/news/politics/85940-list-of-election-cancelled-in-tamilnadu.html
அரவக்குறிச்சியில் அ.தி.மு.க வேட்பாளர் 59.4 கோடி ரூபாயும், தி.மு.க வேட்பாளர் 39.6 கோடி ரூபாயும் பணம் விநியோகம் செய்திருந்ததாகப் புகார் எழுந்தது. இத்தனை புகார்கள், விசாரணைகள், ஆதாரங்கள் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இப்போது, அனைத்தையும் மிஞ்சும் விதத்தில் ஆர்.கே.நகரில் பண விநியோகம் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகின. இதன் அடிப்படையில், தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
என்னதான் தேர்தலை ரத்துச் செய்தாலும், தவறு செய்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தகவல் இல்லை. தவறு செய்யும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை நிறுத்த முடியும். இல்லை என்றால், தேர்தல் ரத்து தொடர்கதையாகத்தான் இருக்கும்.