மோடியின் கொள்கைகளையும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும் ஏற்காதவர்களுக்கு நாட்டில் இடமில்லையா? இதுதான் மோடியின் புதிய எதிர்காலத்திட்டமா என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திகடுமையாக குற்றம்சாட்டினார்.
டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
இதுதான் புதிய இந்தியாவா?
புதிய இந்தியாவை உருவாக்குகிறேன் என்று பிரதமர் மோடி பரப்புரை செய்து வருகிறார். இந்த தொலைநோக்கு என்பது ஒரு சிந்தனை, செயல்பாடு மட்டும்தான். அதாவது, பிரதமர் மோடி அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனைகளுக்கும், கொள்கைகளுக்கும் யார் ஒத்துவரவில்லையோ அவர்களுக்கு நாட்டில் இடம் கிடையாது என்கிறார்கள்.
இதுதான் உங்கள் நோக்கமா?
பின்விளைவுகள்
ராஜஸ்தான் அல்வார் நகரில் பசு வியாபாரி ஒருவரை பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இது மிகவும் கடுமையான பின்விளைவுகளை நாட்டில் உண்டாக்கும். இதுதான் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இந்து அமைப்புகளின் சிந்தனை. தங்களின் சிந்தனையில் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மீது இந்த நாட்டில் இடமில்லை என்கிறார்கள்.
பொறுப்பு இல்லாமல்
அல்வார் நடந்த தாக்குதல் என்பது காட்டுமிராண்டித்தனமானது, மூர்க்கத்தனமானது. இந்த விஷயத்தில் மாநில அரசு பொறுப்பை தட்டிக்கழித்துப் பேசி, வன்முறை கும்பலின் ஆட்சியை நடத்த விடுகிறது.அல்வாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
கண்டிக்க வேண்டும்
சரியான சிந்தனை கொண்ட அனைத்து இந்தியர்களும், குருட்டுத்தனமான காட்டுமிராண்டி தாக்குதலை கண்டிக்க வேண்டும். ராஜஸ்தான் அரசு இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.