வியாழன், 13 ஏப்ரல், 2017

சென்னை ஸ்தம்பிப்பு.. உளவுத்துறை கண்ணில் மண்ணை தூவி, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல நடந்த போராட்டம்!

மின்னல் வேகத்தில் நடந்த இந்த போராட்டம், ஏறத்தாழ, ராணுவ வீரர்கள் நடத்தும், சர்ஜிகல் ஸ்டிரைக் போல இருந்தது. அரசு நிர்வாகங்களால் இதை ஊகிக்கவே முடியவில்லை.
சென்னை: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையில் இன்று சென்னையில் திடீரென போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. கிண்டி கத்திப்பாரா பாலத்தை தேர்ந்தெடுத்த போராட்டக்காரர்கள், சங்கிலி பூட்டு போட்டு ஒரு வாகனத்தையும் நகரவிடாமல் செய்துவிட்டனர். இப்படி ஒரு போராட்டத்தை அதையும், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்ட போராட்டத்தை முன்கூட்டியே கணிப்பதில் மாநில உளவுத்துறை முழு தோல்வியடைந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாநில உளவுத்துறை மிகவும் கொடி கட்டி பறந்தது. அரசியல் எதிரிகளை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டாலும், தீவிரவாதம், மாவோயிஸ்ட் செயல்பாடு போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் ஜெயலலிதா தலைமையிலான அரசின் உளவுத்துறை திறம்பட செயல்பட்டது.

வெற்றிகரமான போராட்டம்
ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் கூட, உளவுத்துறையால் மாணவர்கள் திரள், கவுதமனின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே கேலிக்கூத்துதான். ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது கவுதமன் முன்னின்று போராடியவர். வழக்கமாக இதுபோன்ற போராட்டக்காரர்களை உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வரும். இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கோஷங்களும் எழும். ஆனால் கவுதமன் இதையெல்லாம் தாண்டி போராட்டம் நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
மின்னல் வேகத்தில் நடந்த இந்த போராட்டம், ஏறத்தாழ, ராணுவ வீரர்கள் நடத்தும், சர்ஜிகல் ஸ்டிரைக் போல இருந்தது. அரசு நிர்வாகங்களால் இதை ஊகிக்கவே முடியவில்லை. டிராபிக் நெரிசலில் சென்னை விழிபிதுங்கிய பிறகுதான் ஓரளவுக்கு நடப்பது என்ன என்பதை காவல்துறை, உளவுத்துறை அறிந்து கொள்ள முடிந்தது.

போராட்ட களம்
மேலும், போராட்டக்காரர்கள், சென்னையின், முக்கியமான இடத்தை போராட்ட களமாகக தேர்வு செய்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். போராட்ட களமாக சென்னை நகரின் நுழைப் பகுதியைத் தேர்வு செய்துள்ளனர்.
மக்களின் கருத்து
அதேநேரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தாலும் கூட பலர் போராட்டம் நியாயமானதே என்றனர். சிலர் நியாயமானது என்றாலும் வேறு இடத்தில் செய்திருக்கலாம் என்றனர். மக்களிடம் ஒரேடியாக வெறுப்பை சம்பாதிக்கவில்லை என்றபோதிலும், சிலர் அசவுகரியத்தை உணர்ந்ததாக வேதனைப்பட்டனர். எப்படியோ மாநில காவல்துறை, உளவுத்துறை, மாணவர்கள் போராட்டத்தின் முன்பு தோற்றுவிட்டதாகவே தெரிகிறது.

http://kaalaimalar.net/pro-farmer-protest-held-like-army-surgical-strike-chennai/

Related Posts: