அனைத்து தரப்பு விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உத்தரவை விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றாலும் டெல்லி போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், எனக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. பட்டா வைத்திருக்கிறேன். ஆனால் கடன் வாங்கியது 4 ஏக்கருக்குத்தான். எனக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழும் தரப்பட்டது. எனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நான் அணுகினேன். எனக்கு ஏன் கடனை தள்ளுபடி செய்தீர்கள். நான் பெரிய விவசாயி. ஆனால் ஒரு சென்ட் கூட இல்லாதவர்கள், குத்தகைதாரனுக்கு ஏன் தள்ளுபடி செய்யவில்லை? என கேட்டேன்.
இங்கு பேதம் பார்க்கப்படுகிறது. பேதம் பார்க்க கூடாது. தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிறு குறு விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்போருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார். எல்லா விவசாயிகளுக்கும் அதாவது 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நான் நீதிமன்றத்தில் கேட்டிருந்தேன். கிட்டத்தட்ட 7 மாத காலமாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்றம் கூட்டுறவு வங்கியில் அனைத்து தரப்பு விவசாயிகளும் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 3 மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் இந்த 3 மாதம் வரை ஜப்தி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
நாங்கள் டெல்லிக்கு வந்தது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்குத்தான். எனவே அதுவரை டெல்லி போராட்டம் தொடரும் என கூறினார்.
பதிவு செய்த நாள் : April 04, 2017 - 06:19 PM