திங்கள், 4 செப்டம்பர், 2017

கிருஷ்ணாசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதியின் அதிரடி கருத்து! September 04, 2017

கிருஷ்ணாசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதியின் அதிரடி கருத்து!


நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் அதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராகவும் தீவிரமாக பேசிவரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி அனிதாவால் மருத்துவப் படிப்பிற்குள் நுழைய முடியவில்லை. இதற்கு நீட் தேர்வே காரணம் எனக் கூறி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாணவி அனிதா. ஆனால் உச்ச நீதிமன்றமோ மற்ற மாநிலங்களைப் போல தமிழ் நாடும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனால் ஏமாற்றமடைந்த மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கிருஷ்ணசாமியோ நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தப்ட வேண்டும் எனக் கூறி நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசிவருகிறார். மேலும் மாணவி அனிதா மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்பட தெரிவிக்க முடியாது எனவும் அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்தினால் உண்மை என்னவென்று தெரியும் எனவும் கூறினார். 


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, கிருஷ்ணசாமி அவருடைய மகள் பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதும், அபோதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டு அதன் மூலம் அவருடைய மகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் வாங்கியதாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது மகளுக்கு சிபாரிசு மூலம் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கிய கிருஷ்ணசாமி இப்பொழுது மற்ற ஏழை மாணவிகளின் மருத்துவப் படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவது அவரது சுயநலம் என விமர்சித்துள்ளார். 

இந்தப் பதிவை பால பாரதி அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அந்தப் பதிவு அவருடையப் பக்கதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.