வியாழன், 7 செப்டம்பர், 2017

டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை! September 07, 2017

டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை!


திருப்பூர் பல்லடம் அருகே டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் மனமுடைந்த விவசாயி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரிநாதன். கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு வெள்ளியங்கிரி தனது விவசாயப் பயன்பாட்டிற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கு உரிய முறையில் தவணை செலுத்தாததால், வங்கி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிராக்டரை ஜப்தி செய்ய உத்தரவிட்டனர். 

இதையடுத்து, வெள்ளியங்கிரிநாதன் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், டிராக்டரை ஜப்தி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெள்ளியங்கிரிநாதன் டிராக்டரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார். பல்லடம் காவல்நிலையத்திற்குச் சென்று வங்கி அதிகாரிகளின் கெடுபிடி நடவடிக்கை குறித்து புகாரளித்துள்ளார். சென்னை நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டுள்ளதால் புகாரை வாங்க போலீசார்  மறுத்துள்ளனர்.

இதனால் மிகுந்த மனவேதனையடைந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் தனது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக வெள்ளியங்கிரிநாதனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதனுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: