திங்கள், 11 செப்டம்பர், 2017

வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்....வறுத்தெடுத்த பா.ரஞ்சித்..! September 10, 2017

வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்....வறுத்தெடுத்த பா.ரஞ்சித்..!


பா.ரஞ்சித் தன்னை தலித் என்று சொன்னதற்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு, தலித் என்பது ஜாதி பெயர் இல்லை என ரஞ்சித் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த வியாழக்கிழமை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவுக்காக உரிமையேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பா.ரஞ்சித்,அமீர், ராம் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராகவும்,அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பேசினர். 

அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்,  “ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை மட்டும் தமிழர்களின் பொதுப் பிரச்சனையாக முன்னிறுத்தி போராட்டம் நடத்தும் நாம், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட  தலித் மக்கள்கள் சக தமிழர்களால் சாதியின் பெயரால் படுகொலை செய்யப்படும்போது ஏன் போராட மறுக்கிறோம். இன்னும் தமிழர்கள் அரசியல் வயப்படவேயில்லை. உணர்ச்சிகள் பொங்க தமிழர், தமிழர் என்று பேசுகிறோமே ஒழிய, அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோர்களின் சித்தாந்த சித்தாந்தத்தின் வழியாக நாம் எதையும் அனுகுவதில்லை” என்றார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் அமீர், “ தலித் என்று அனிதாவை பிரித்து பேசவேண்டாம், அவரை தமிழர் என்றே சொல்லுங்கள் என தெரிவித்தார், இதற்கு அந்த மேடையிலேயே பதிலளித்த பா.ரஞ்சித், தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் தமிழன் தமிழன் என்று பூச்சாண்டி காட்டப்போகிறீர்கள்? இங்கே ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது. நான் இன்னும் சேரியில்தான் வாழ்கிறேன்.சாதியை ஒழிக்காமல் எப்படி நீங்கள் தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியும் என காட்டமாக கேள்வியெழுப்பினார். 


இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பு நிலவியது. இயக்குநர் ராம் உள்ளிட்ட பலரும் பா.ரஞ்சித்தை சமாதானப்படுத்தினார்கள். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவு செய்துள்ள எஸ்.வி.சேகர், ‘தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று ரஞ்சித் சொல்கிறார்.  தன் சாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்’ என பதிவிட்டிருந்தார். இதற்கு அந்த பதிவிலேயே பதில் அளித்துள்ள ரஞ்சித், 'தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்' பதிலடி கொடுத்துள்ளார். 

இந்நிலையில், சாதி தேவை என்று ஒரு சாராரும், சாதி ஒழிக்கப்படவேண்டும் என்று இன்னொரு சாராரும், தமிழ் தேசியம் பெற்றால் போதும் என்று மற்றொரு சாராரும், மாறிமாறி இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Posts: