புதன், 13 செப்டம்பர், 2017

கோரக்பூர் மருத்துவ பயங்கரம் - மருத்துவர் நீதிமன்றத்தில் சரண்! September 12, 2017

​கோரக்பூர் மருத்துவ பயங்கரம் - மருத்துவர் நீதிமன்றத்தில் சரண்!



உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ், நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர் சிறையிலடைக்கப்பட்டார். இதனிடையே, மருத்துவர் சதீஷை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப் போவதாக உத்தரப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோரக்பூரில் செயல்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாநில பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலை இச்சம்பவம் உருவாக்கியது. மருத்துவமனையில் பிராண வாயு உருளைகள் போதிய அளவில் இருப்பு இல்லாததே குழந்தைகள் இறப்புக்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க மாநில தலைமைச் செயலர் ராஜீவ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சம்பவத்தை விசாரித்த அக்குழு, பாபா ராகவ் மருத்துவமனை முன்னாள் தலைவர் மருத்துவர் ராஜீவ் மிஸ்ரா, மயக்க மருந்தியல் துறை முன்னாள் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கோரக்பூரில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை நேரில் சரணடைந்தார்.

Related Posts: