புதன், 13 செப்டம்பர், 2017

​காஷ்மீரில் பெளத்த, இஸ்லாமிய மக்களிடையே மீண்டும் தலைதூக்கும் இன மோதல்!! September 12, 2017

​காஷ்மீரில் பெளத்த, இஸ்லாமிய மக்களிடையே மீண்டும் தலைதூக்கும் இன மோதல்!!


காஷ்மீரில் உள்ள லே மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கிய லடாக் பகுதியில் புத்த மதத்தினரே பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள், இவர்களுக்கு அடுத்த இடத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர்.

இந்நிலையில், ஷியா பிரிவைச் சேர்ந்த 32 வயதான முர்தசா என்பவர் கடந்த 2015ல், புத்த மதத்தைச் சேர்ந்த 30 வயது சல்தோன் என்ற பெண் ஒருவரை மணந்து கொண்டார்.

இந்த திருமணத்திற்காக புத்த மதத்தைச் சேர்ந்த சல்தோன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி ஷிஃபா என்ற புதிய பெயரையும் வைத்துக்கொண்டார், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுள்ளது.

தான் சுய விருப்பத்தின் பேரிலேயே முஸ்லீம் மதத்திற்கு மாறியதாக ஷிஃபா கூறினாலும், அவர் கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் மிரட்டப்படுவதன் காரணமாகவே இவ்வாறு கூறுவதாகவும் லடாக் புத்த அமைப்பு குற்றம்சாட்டுகிறது. இந்த விவகாரம் லடாக் பகுதியில் பூதாகரமாக மாறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது புத்த மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களை, இஸ்லாமிய இளைஞர்கள் வேண்டுமென்றே காதலித்து மதமாற்றம் செய்து மணமுடிக்கும் ‘லவ் ஜிஹாத்’ செய்யப்படுகின்றனர் என்று கூறினார்.

2003 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் இதே முறையில் 45 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

2,74,000 பேர் வசிக்கும் லடாக்கில் 51% புத்த மதத்தினரும், 49% முஸ்லீம்களும் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக இந்த பிரச்சனை காரணமாக இரு மதத்தினருக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது.

மாநில அரசு இப்பிரச்சனையில் தலையிட மறுப்பதாகவும், பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பாக முறையிட உள்ளதாகவும் லடாக் புத்த அமைப்பு கூறுகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு இதே காரணத்திற்காக முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. பின்னர் முஸ்லீம்களுடன் எவ்வித சமூகத் தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என்று புத்த அமைப்பு தடை விதித்திருந்தது. பின்னர் 1992 இத்தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் அதே போன்ற பிரச்சனை எழுந்துள்ளது, மத மோதல்கள் அதிகரிக்கும் முன்பு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாகும்.

Related Posts: