செவ்வாய், 3 அக்டோபர், 2017

புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தயாராகும் ரிசர்வ் வங்கி October 03, 2017

புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தயாராகும் ரிசர்வ் வங்கி


வரும் ஏப்ரல் 2018 முதல் புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அன்று முதல் இன்று வரை புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது, இதன் அச்சடிப்புப் பணி வரும் மார்ச் மாதம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200rs

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 100 ரூபாய் நோட்டுகள் மறுவடிவமைப்பு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பழைய 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. மேலும் 100 ரூபாய் நோட்டின் அளவு, பரிமாணத்தில் எந்தவித மாற்றமுமின்றி உள்வடிவமைப்பு மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது. இது ஏ.டி.எம்-ல் பணமெடுக்கும் சிக்கலை தவிர்க்கவே என தெரிகிறது.

இதனிடையே, அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவே புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள மொத்த பணப்புழக்கத்தில் 43.6% 500 ரூபாய் நோட்டுகள் எனவும், இதில் 100 ரூபாய் நோட்டுகள் வெறும் 20% எனவும் பாரத ஸ்டேட் வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்புப் பணி முடிய இன்னும் 6 மாத காலம் ஆகும் என்பதால், வரும் ஏப்ரல் 2018 முதல் இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதரத்தை அனைத்து தரப்பினரும் கேள்வி கேட்டு வரும் நிலையில் மத்திய அரசு தனது அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.