திங்கள், 9 அக்டோபர், 2017

அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம்! October 09, 2017


அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம்!


ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளது. நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணிக்காக அதானி குழுமத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த நிலக்கரிச் சுரங்கம் அந்நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த சுரங்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அதானி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டக் குழுவினரோ, ஆஸ்திரேலியா மிகவும் தூய்மையான பகுதி என்றும் அங்கு நிலக்கரிச் சுரங்கம் அமைந்தால் சுற்றுசூழல் மிகவும் மாசு அடையும் என போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் உலக வெப்பமயமாதலால் ஏற்கெனவே பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கும்போது, இயற்கையை அழிக்கக்கூடிய இது போன்ற சுரங்கப் பணிக்களுக்கு அனுமதியளிப்பது தவறானது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதானியின் நிலக்கரிச் சுரங்கக் கட்டுமானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட போதே வடக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலக்கரிச் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம் சாட்டிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிராக குழு அமைத்தனர். மேலும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று கூட்டி அதானியின் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். 

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதானி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். கடற்கரை மணலில் STOP ADANI, ADANI GO HOME என்று எழுதி அவர்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி போராடி வெற்றியை தேடிக்கொடுத்தனர். அதைப்போல இப்பொழுது ஆஸ்திரேலியாவிலும் கடற்கரையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts: