வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5%க்கு ஒப்புக்கொண்டார்? அப்படி என்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று மதுரை அருகே வாடிப்பட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பங்கேற்றார். அவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டைவிட, 60 தொகுதிகள் அதிகம் உள்ள மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது அரசியல் உள்நோக்கம் என அறிய முடிகிறது.
1931-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் மட்டுமே சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். அதன்பிறகு ஓபிசி சமூகத்தில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தவே இல்லை. ஒருவேளை 10.5% வன்னியர்கள் இருக்கிறார்கள் எனில் 1931-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்க முடியும்.
இப்போது நடக்கும் 2021 தேர்தலை வைத்துப் பார்க்கும்போது, ஏறத்தாழ 70 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம். 1936ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு 2001 மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
வன்னியர்களுக்கு 20% உள் இட இதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5% உள் ஒதுக்கீடுக்கு ஒப்புக்கொண்டார்? அப்படி என்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா? இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இது தேர்தல் கால நாடகமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் பழனிசாமியின் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்பு உட்பட அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும். அதன் பிறகு, இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கை எடுக்கலாம்” என்று திருமாவளவன் கூறினார்.
அதே போல, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எம்.பி.சி பிரிவில் உள்ள மற்ற 93 சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-questions-raised-why-dr-ramadoss-accepted-to-vanniyars-10-5-percent-internal-reservation-250068/