
18.05.2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிகை 16 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதில் ஒரு புறம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் நடவடிக்கைக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் நிதி தேவைப்படுவதால், மக்கள நிதியுதவி அளிக்குமார் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்று தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் சாதாரன மக்கள் வரை அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக சார்பில் ஒரு கொடி நன்கொடை அளிப்பதாக நேற்று அறிவிக்கப்ட்டது. இதனைத்தொடர்ந்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக செய்தித்தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர், செயலாளர் பாலகங்கா, ஆகியோர் இன்று தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்து கோடி நிதிக்கான காசோலையை வழங்கினர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், அனைவரும் முதல்வரை சந்தித்து நிதி வழங்கி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளரிடம் நிதி வழங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்தபோது அப்போது எதிர்கட்சி செயல்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிதி வழங்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக சார்பில், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் போன் மூலமாக வாழ்த்து தெரிவித்து புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த 7-ந் தேதி திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்டார். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியல் நிகழ்வதாக அரசியல்பிரமுகர்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி அளித்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளரிடம் நிதி வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், மக்களுக்கு பாதிப்பு என்றால் அதிமுக குரல் கொடுக்கும் என்றும் கூறினார். மேலும் கடந்த கால திமுக ஆட்சியில், விமர்சனங்கள் அதிகம் இருந்த சூழ்நிலையில், மக்கள் பாராட்டும்படியாகவும், அகில இந்திய அளவில் பாராட்டும்படியாகவும், முதல்வாக இருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறம்பட செயல்பட்டார்கள். அது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.
எனவே மலிவான விளம்பரம் தேடும் வகையில் திமுகவை போல அரசை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஒரு ஆக்கப்பூவமான எதிர்கட்சி என்ற முறையில் கொரோனா குறித்து அரசின் நடவடிகைகைக்கு அதிமுக ஒத்துழைப்பு கொடுக்கும். ஆனால் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-donation-aiadmk-former-minister-jayakumar-mee-chief-secretary/