தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம், வீட்டு மின் கட்டணம் குறைவாக செலுத்தும் நிலை ஏற்படும் மின்கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறது.
மாதாந்திர மின் கட்டண கணக்கீடு செய்யப்படுவதால் எப்படி மின் கட்டணம் குறையும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்பட்டால் எப்படி மின் கட்டணம் குறையும்?
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் அறிவிப்புபடி, வீட்டு மன் உபயோகத்திற்கு முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற மின் கட்டண முறையில் கணக்கிடப்படுகிறது.
ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் உள்ள 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் ரூ.150 அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20 சேர்த்து மொத்தமாக ரூ.170 வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவே, ஒருவர் வீட்டில் 520 யூனிட்டுகள் உபயோகித்தால், முதல் 100 யுனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50ஆக அதிகரிக்கும். அப்படிப்பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். 201-500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.4.60 என்ற வீதத்தில் ரூ.1,380 வசூலிக்கப்படும். 500-520 யூனிட்டுகள் வரை ஒவ்வொரு யூனிட்டின் விலை ரூ.6.60 என்ற வீதத்தில் ரூ.132 மற்றும் நிலையான கட்டணம் ரூ.20 உடன்என்று மொத்தமாக ரூ.1,912 கட்டணமாக வசூலிக்கப்படும்.
தமிழக அரசின் இந்த மின்கட்டண முறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த மின் கட்டண முறை மக்களுக்கு மிகவும் குழப்பமானதாகவும் உள்ளது. அதோடு, உரிய நேரத்தில் மின் கட்டணம் கணக்கெடுக்க முடியாமல் தாமதமாகும் சூழ்நிலையும் உள்ளது.
இதைவிட முக்கியமானது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் மின் உபயோகம் அதிகரிக்கும். இதனால், டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி அதிக மின் கட்டணம் செலுத்த நேரிடுகிறது.
ஒருவர் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீட்டு முறையில், முதல் 100 யூனிட்டுகள் போக முதல் மாதத்தில் 200 யூனிட்டு பயன்படுத்துகிறார் என்றால், 2வது மாதம் முடிவடையும்போது 400 யூனிட்டுகளை பயன்படுத்துகிறார் என்றால் அப்போது மின் கட்டணம் அதிகமாகும். இதுவே மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தினால் மின் கட்டணம் குறைவாக வரும்.
அதனா, பொதுமக்கள் தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறையைக் கொண்டுவர வேண்டும். அல்லது மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில்தான், திமுக தனது தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டால், வீட்டு மின் உபயோக நுகர்வோர்கள் வெகுவாக மின் கட்டணத்தைக் குறைத்து செலுத்த நேரிடும் என்பதில் ஐயமில்லை. அதனால், மின் நுகர்வோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-says-monthly-electricity-bill-calculation-will-be-introduced-soon-304667/