புதன், 12 மே, 2021

உத்தர பிரதேசத்தின் அதிகரிக்கும் மரணம்; படுக்கை தட்டுப்பாடு:

 

உத்தர பிரதேசத்தின் அதிகரிக்கும் மரணம்; படுக்கை தட்டுப்பாடு:

கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க முடியாமல் திணறி வரும் உத்தர பிரதேஷ பாஜக அரசு நிர்வாகத்திற்கு எதிராக, அக்கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா நிலைமையை அரசு கையாளும் விதம், மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை, கொரோனா நோயாளிகளின் உதவிக்கான அவசர அழைப்புகள் என, அவர்கள் தங்களது தொகுதிகளில் சந்தித்து வரும் பல இக்கட்டான பிரச்னைகளை மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களில், உத்தர பிரதேசத்தின் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் கொரோனா சூழலை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உணர்த்தும் வகையில், தொடர்ந்து கடிதம் எழுதி வந்தனர். மேலும், அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்திருக்க கூடிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாநிலத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக விளங்கும் மாவட்டங்களுக்கு நிலைமையை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், கடந்த 6 -ம் தேதி அன்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனது மக்களவை தொகுதியான பரேலியில் மிக மோசமான கொரோனா சூழலை விளக்கி உள்ளார். அதற்கு முன்னதாக, உத்தர பிரதேச அமைச்சரும் லக்னோ தொகுதியின் எம்.எல்.ஏவுமான பிரிஜேஷ் பதாக், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்த பி.ஜே.பியின் பரேலி எம்.எல்.ஏ கேசர் சிங், கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய சகோதரனை இழந்த மோகன்லல்கஞ்ச் எம்.எல்.ஏ கெளசல் கிஷோர், பஸ்தி எம்.பி. ஹைஷ் திவேதி, படோஹி எம்.எல்.ஏ தினநாத் பாஸ்கர் மற்றும் கான்பூர் எம்.பி. சத்யதேவ் பச்செளரி ஆகியோரும் முதல்வருக்கு இதுபோன்ற கடிதங்களை எழுதியிருந்தனர். மாநில நிர்வாகத்தின் தோல்வி மற்றும் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற மருத்துவப் பொருட்களுக்கான கோரிக்கைகளுடன் அழைப்புகள் குவிந்திருந்த நிலையில், அவர்கள் எவ்வாறு உதவியற்றவர்களாக உணர்ந்தார்கள் என்பதை அவர்களது கடிதங்களில் சுட்டிக்காட்டினர்.

லக்னோ மேற்கு தொகுதி எம்.எல்.ஏ சுரேஷ் ஸ்ரீவஸ்தவா, ரே பரேலி தொகுதி எம்.எல்.ஏ தல் பகதூர் கோரி, பரேலியின் கேசர் சிங், அவுரியாவின் ரமேஷ் திவாகர் என 4 எம்.எல்.ஏக்கள் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, கொரோனா தொற்றுக்கு உள்ளான பாஜகவின் ஃபிரோசாபாத் எம்.எல்.ஏ பப்பு லோதி, ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அவரது அந்த வீடியோவில், கொரோனா தொற்றுக்கு உள்ளான தனது மனைவி, ஆக்ராவில் உள்ள எஸ்.என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், படுக்கைக்காக சுமார் 3 மணி நேரம் காத்திருந்த சூழலை வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சையில் இருந்து வருவோரின் எண்ணிக்கையில் இந்தியாவில் முன்னனியில் உள்ள உத்தர பிரதேஷத்தில் தற்போது, 2.25 லட்சம் பேர் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால், மருத்துவக் கட்டமைப்பின் கடுமையான பற்றாக்குறையை சந்தித்து வரும் மாநிலமாக உத்தர பிரதேஷம் உருவெடுத்துள்ளது.

லக்னோ, கான்பூர் நகர், வாரணாசி, பிரயாகராஜ், மீரட், புத்த நகர், கோரக்பூர், காஜியாபாத், பரேலி மற்றும் மொராதாபாத் ஆகியவை தொற்றுக்கு உள்ளாகி மோசமான நிலையில் உள்ள மாவட்டங்களாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் லக்னோ நாடாளுமன்றத் தொகுதிகளில், மாநிலத்தில் மொத்தமாக பதிவாகி உள்ள தொற்று எண்ணிக்கையான சுமார் 15 லட்சத்தில், 7.38 லட்சத்தை கொண்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பாஜக தலைவர்கள் பலர், பொதுமக்கள் தங்கள் தொகுதிகளில் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதை குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் நிலைமை மேம்பட்டுள்ளதாக மோகன்லல்கஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர் கெளஷல் கிஷோர் கூறிய நிலையில், மீரட் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர அகர்வால், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்னும் போராடி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய கெளஷல் கிஷோர், கிராமப் புறங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பலர் சோதனை மற்றும் சிகிச்சைக்கு முன் வர மறுப்பதால், கிராமப் புறங்களில் நிலைமை ஆபத்தாகி உள்ளது. இந்நிலையில், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறினார்.

பாஜக தலைவரும், பைசாபாத் எம்.பியுமான லல்லு சிங், கடந்த 3 நாள்களில் இறுக்கமான நிலைமை சற்று தளர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தினமும் காலை 1 மணி வரை உதவி கோரி 250 அழைப்புகளை பெறும் அவர், தற்போது அதிகபட்சமாக 25 அழைப்புகளை மட்டுமே பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பிரச்னைகள் இருந்தன. ஆனால், தற்போது பிரதமர் மற்றும் முதல்வர் இருவரும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் உள்பட தேவையானவற்றின் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கான்பூரில் உள்ள கிட்வாய் நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, கடந்த 4-5 நாட்களில் நிலைமை மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அல்லது மருந்துகளுக்கு உதவி கோரி எனது அலுவலகத்திற்கு ஒரு நாளைக்கு 250-300 தொலைபேசி அழைப்புகள் வரும். ஆனால், இப்போது எனக்கு தினமும் 8-10 அழைப்புகள் மட்டுமே வருகின்றன என, அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது மாநிலத்தில் நிலைமை சீராகி வருவதாக தெரிவித்துள்ளார். திடீரென்று கிளம்பிய கொரோனா இரண்டாவது அலை, மத்திய, மாநில அரசுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய சவாலாகி உள்ளது. இப்போது நிலைமை உள்ளது. கடந்த 10 நாட்களில், மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருந்த 85,000 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஆதித்யநாத் இதுவரை, பரேலி, வாரணாசி, கோரக்பூர் மற்றும் அயோத்தி ஆகிய நான்கு மாவட்டங்களை பார்வையிட்டுள்ளார். அங்கு அவர் மருத்துவமனைகளை ஆய்வு செய்த பின், கொரோனா சிகிச்சையை நிர்வகிக்கும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆதித்யநாத் அரசாங்கத்தின் அமைச்சரவை மந்திரி சித்தார்த் நாத் சிங், மாநில அரசு கொரோனாவுக்கு எதிரான திறனை வளர்த்துக் கொண்டிருக்கையில், தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, அவர்களின் பணியை கடினமாக்கியதாக கூறினார். உத்தர பிரதேஷத்தில் திறன் மற்றும் தேவைக்கு இடையிலான விகிதம் 1:10 உள்ளதாகவும், இயற்கையாகவே நெருக்கடியுடன் இருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, மாநிலத்தின் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார். அரசாங்கத்தின் முயற்சிகளை பட்டியலிட்டு, கொரோனா நிலைமையைச் சமாளிக்க, கிட்டத்தட்ட 60,000 துணை மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் வென்டிலேட்டர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமையன்று 1,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து 822 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் தலா 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் கிராம மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். மக்களுக்கு உதவுவதற்காக நாங்கள் தூங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தலைவர்கள் நிலைமை தளர்வாகி உள்ளதாக கூறி வரும் சூழலில், ​​பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் சஹரன்பூர் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாஜி ஃபஸ்லூர் ரெஹ்மான் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளைப் பெறுவதற்கு உதவி கேட்டு தனக்கு ஒரு நாளைக்கு 60-70 அழைப்புகள் வருவதாகவும் அவர் கூறினார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் கொரோனா அல்லாத நோயாளிகளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி கூட முறையாக செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தி உள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/covid-rumblings-within-bjp-leaders-in-up-complain-as-govt-puts-up-a-brave-face-302067/