13.5.2021 சென்னையில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், சென்னை மாநகராட்சி புதிய வழிமுறைகளை கையாண்டு தொற்று கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று காய்ச்சல் பரிசோதனை செய்தல், மருத்துவர்கள் தொலைப்பேசியில் இலவசமாக ஆலோசனை வழங்குவதல், கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு இலவசமாக மருத்துவ பொருள்களை வழங்குதல் ஆகியவற்றில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காய்ச்சல், இருமல், உடல் வலி, வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற கொரோனா தொற்று அறிகுறிகளுடன் அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும் அனைவரும் சந்தேகத்திற்கு உரியவர்களாக கருதப்படுவார்கள். ஒரு வேளை இவர்களுக்கு பரிசோதனையில் முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் வரை மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறார்கள். இவர்களால், தொற்று பரவல் அதிகரிக்கிறது. இதனால், இவர்கள் பரிசோதனை செய்துக் கொண்ட பின்னர், அடிப்படை மருத்துவப் பொருள்கள் அடங்கிய கிட் ஒன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முதன்மை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், முதன்மைச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். ‘மாநகராட்சி நிர்வாகம் 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தாலோ, அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதா அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்வதா என்பது குறித்து அறிவுறுத்த வீடுகளுக்கே சென்று பரிசோதனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, வீடுகளில் உள்ள சிறிய அறைகளிலோ அல்லது மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிகளிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள், 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ள சென்னை மாநகராட்சியின் படுக்கை வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில், கொரோனா சிகிச்சைப் பணிகளுக்காக 300 இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து செயல்படுவார்கள் எனவும், சிலர் தொலைப்பேசி மூலம் ஆலோசனை வழங்குவதில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், முதல் அலையை விட, இரண்டாம் அலையில் தொற்று பரவல் விகிதம் அதிகமாக இருப்பதால் அரசு வழங்கிய நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள பரிசோதனை மையங்களுக்கு வருவோர்களுக்கு வழங்குவதற்காக 16,000 முக்கிய மருத்துவப் பொருள்கள் அடங்கிய கிட், தயாராக இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனைகளின் சுமையை குறைப்பதற்காக, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் விநிநோகம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-corporation-to-adopt-new-strategy-to-59-the-chain-3026/