வியாழன், 13 மே, 2021

கொரோனாவும் இரத்த உறைவும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை இதோ…

 உலகம் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வைரஸானது, ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் இப்போது அறிகிறோம். “காய்ச்சல் மற்றும் நுரையீரல் ஃபைப்ரோஸிஸுடன், சில நோயாளிகளுக்கு இரத்த உறைவு கூட ஏற்படலாம்” என்று வோக்ஹார்ட் மருத்துவமனையின் இருதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சேத்தன் பாம்புரே கூறியுள்ளார்.

இரத்த உறைவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே

காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறைதல் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அது காயம் ஏற்பட்ட இடம் மட்டுமல்லாமல் இரத்த நாளத்திற்குள் உறைந்தால், அது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த கொரோனா வைரஸ் உடலின் உறைதல் செயல்முறையைத் தூண்டும் எண்டோடெலியல் செல்களை ஆக்கிரமித்து சேதப்படுத்துகிறது. வைரஸ் தொற்று காரணமாக உடலைச் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பால், உறைதல் ஏற்படுகிறது. வைரஸ் தொற்றை எதிர்க்கும் வகையில் நமது நோயெதிர்ப்பு அமைப்பு உருவாக்கும் அழற்சி மூலக்கூறுகளின் அதிகரிப்பு உறைதலை செயல்படுத்துகிறது. COVID-19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் பிளேட்லெட்டுகள் அதிக செயல்திறன் கொண்டவை என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த இரத்த தட்டுகள் அதிக செயல்பாடு மற்றும் திரட்டுதல் (கொத்துதல்) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இரத்த உறைவால் யாருக்கு அதிக ஆபத்து?

சிலருக்கு இரத்த உறைவால் அதிக ஆபத்து உள்ளது. “இவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள், டி-டைமரின் உயர் இரத்த அளவுள்ள நோயாளிகள் (உறைதலுக்கான ஒரு மார்க்கர்) மற்றும் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற இணை நோய் உள்ளவர்களும் அடங்குவர். எனவே, இந்த நோயாளிகள் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ”என்று டாக்டர் பாம்புரே தெரிவித்தார்.

இரத்தம் உறைதலால் இதயத்தின் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு போன்ற பல சிக்கல்கள் ஏற்படும். மேலும், மூளையின் தமனியில்  அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். நுரையீரல் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்து நுரையீரல் தக்கையடைப்பு ஏற்படும். லிம்ப் இஸ்கெமியா என்பது கால்களின் தமனியில் ஏற்படும் உறைவு ஆகும்; மெசென்டெரிக் இஸ்கெமியா என்பது குடல்களுக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் ஏற்படும் உறைதல் ஆகும்; ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ், இதில் கால்களின் நரம்புகளில் ஏற்படும் இரத்த உறைவால் நுரையீரல் தக்கையடைப்பு ஏற்படலாம்; மற்றும் பெருமூளை சிரை சைனஸ் த்ரோம்போசிஸ், இது மூளையின் நரம்புகளில் ஏற்படும் உறைதல் ஆகும்.

இரத்த உறைதலுக்கான சிகிச்சை என்ன?

உறைதல் உருவாகும் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு இரத்த தின்னர் அல்லது ஒரு ஆன்டிகோகுலண்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது உறைதல் உருவாவதைத் தடுக்கும். மேலும், மருத்துவர் பரிந்துரைத்த ஊசி மற்றும் மருந்துகள் கூட இந்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று டாக்டர் பாம்புரே கூறினார்.

இரத்தக் கட்டிகளை எவ்வாறு தடுப்பது?

சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்து நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்கவும்.

அதிக எடையைக் குறைப்பது பருமனானவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். புகைபிடித்தல் நுரையீரலை சேதப்படுத்தும் மற்றும் இரத்த உறைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். “வாய்வழி கருத்தடை மருந்துகள், ஹார்மோன் மாற்று சிகிச்சை மற்றும் சில புற்றுநோய் மருந்துகள் போன்ற சில மருந்துகள் உறைதல் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, இது குறித்து சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் விவாதிக்கப்பட வேண்டும், ”என்று டாக்டர் பாம்புரே குறிப்பிட்டார்.

COVID-19 தொடர்பான இரத்தக் கட்டிகளைத் தடுக்க உதவும் சிறந்த வழி, தொற்றுநோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதே. இந்த கொடிய வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசத்தை சரியாக அணிவது, மற்றும் கழுவப்படாத கைகளால் மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பது போன்றவையாகும்.

source https://tamil.indianexpress.com/lifestyle/know-about-covid-19-and-blood-clots-302567/

Related Posts: