கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் விநியோகங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்நாட்டு பொருட்கள் மற்றும் வணிக ரீதியிலான இறக்குமதி பொருட்கள் போன்றவற்றிற்கு வரி விலக்கு அளித்தால் அது நுகர்வோருக்கு “இந்த பொருட்களை விலை உயர்ந்ததாக மாற்றும்” என்று கூறினார்.
இந்த பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் வரி எவ்வளவு?
தற்போது, உள்நாட்டு பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளின் வணிக இறக்குமதிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் கோவிட் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டது என்ன?
கோவிட் தொடர்பான மருந்துகளை நன்கொடையாக வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் முகவர் நிலையங்கள் மாநில அரசிடம், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், கிரையோஜெனிக் சேமிப்பு தொட்டிகள் மற்றும் தொட்டி கொள்கலன்கள் போன்ற பொருட்களுக்கு சுங்க வரி / மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) / மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) / ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதை பரிசீலிக்க மாநில அரசை அணுகியுள்ளதாக மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு மே 9ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “வரி விகித அமைப்பு மத்திய அரசின் கீழ் வருவதால், மேற்கூறிய உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் விநியோக தடைகளை நீக்க உதவும் வகையிலும், கோவிட் தொற்றுநோயை மாநில அரசுகள் திறம்பட நிர்வகிக்கவும், இந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி / சுங்க வரி மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், என்றும் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரி விலக்கிற்கு எதிராக நிதியமைச்சரின் வாதம் என்ன?
கோவிட் தொடர்பான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் உள்நாட்டு பொருட்கள் மற்றும் வணிக இறக்குமதிக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்கப்பட்டால், உற்பத்தியாளர்கள் பொருட்களுக்கு செலுத்தும் வரிகளை ஈடுசெய்ய முடியாமல், அந்த வரிச் சுமையை நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பதன் மூலம் ஈடுசெய்வர் என நிதியமைச்சர் வாதிட்டுள்ளார். “ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டால், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது, மேலும் விலையை அதிகரிப்பதன் மூலம் அவற்றை இறுதி நுகர்வோர் / குடிமகனுக்கு அனுப்புவார்கள். 5% ஜிஎஸ்டி வீதம் உற்பத்தியாளர் ஐடிசி (உள்ளீட்டு வரிக் கடன்) ஐப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்கிறது மேலும், ஐடிசி அதிகமாக இருந்தால், அவர்களால் திரும்ப பெற முடியும். எனவே ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசிக்கு விலக்கு அளிப்பது நுகர்வோருக்கு பயனளிக்காமல் எதிர் விளைவாக அமையும் ”என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“உண்மையில், பெயரளவிலான 5 சதவீத ஜிஎஸ்டி, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளரின் நலனுக்காகவும் குடிமக்களின் நலனுக்காகவும் உள்ளது” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
வரி பங்கீடு எவ்வளவு?
இந்த பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியிலிருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் வரி பங்கு விவரங்களை நிதியமைச்சர் சீதாராமன் வழங்கியுள்ளார். ஒரு பொருளில் ரூ .100 ஐஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டால், மாநில அரசு மற்றும் மத்திய அரசு முறையே எஸ்ஜிஎஸ்டி மற்றும் சிஜிஎஸ்டியாக தலா ரூ .50 பெறுகின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கூடுதலாக, சிஜிஎஸ்டி வருவாயில் 41 சதவீதம் அதிகாரப் பகிர்வு என மாநிலங்களுக்கு மாற்றப்படுகிறது. “எனவே ரூ .100 வசூலில், ரூ .70.50 மாநிலங்களின் பங்கு,” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள் விற்பனையிலிருந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வருவாயைப் பற்றி, நிதியமைச்சர், பாதி தொகையை மத்திய அரசும், மீதி பாதி தொகையை மாநிலங்களும் சம்பாதிக்கின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனுடன், மத்திய அரசின் வசூலில் 41 சதவீதம் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது, இதன் விளைவாக தடுப்பூசிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 70 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு ஏற்கனவே சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும், மாநில அரசு வழங்கிய சான்றிதழின் அடிப்படையில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கோவிட் நிவாரணப் பொருட்களுக்கும் நாட்டில் இலவச விநியோகத்திற்காக ஐ.ஜி.எஸ்.டி விலக்கு வழங்கப்படுகிறது.
அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் ஆகியவற்றிலிருந்து அவர்களின் வணிக இறக்குமதிக்கு அரசாங்கம் முழு விலக்கு அளித்துள்ளது, என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/explained/why-finance-minister-said-gst-exemptions-will-make-covid-19-supplies-costlier-302025/