10.5.2021 கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுகவின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக நாட்டிலும் மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் ஒரு நெருக்கடியான சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7 தேதி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, நேற்று (மே 9) கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 33 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்ஸிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது. மருதுவ ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உடங்கை முழுமையாக அமல்படுத்த உறுதி செய்வதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை காவல் துறை, நகர்புறத் துறை, ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பன மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரு உயிரிழப்புகூட நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-chaired-first-cabinet-meeting-important-decisions-taken-301488/